சஜித்தையும், அநுரவையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்லர் - விஜயதாச - News View

About Us

About Us

Breaking

Sunday, June 23, 2024

சஜித்தையும், அநுரவையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்லர் - விஜயதாச

வடக்குக்குச் சென்று 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக பேசுவதற்கு ஜே.வி.பிக்கு அருகதையில்லை என்று விமர்சனம் வெளியிட்டுள்ள நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேர்தல் அண்மிக்கின்றமையால் நாடகமாடுகின்றார் என்றும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் வடக்கு விஜயத்தின்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த தருணத்தில்தான் வடக்கு, கிழக்கு மக்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் திடீர் கரிசனைகள் ஏற்பட்டுள்ளன.

இவர்கள் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் சம்பந்தமாக எந்தவிதமான கவனத்தையும் கொண்டது கிடையாது. அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கூட திரும்பிப் பார்த்தது கிடையாது.

குறிப்பாக, ஜே.வி.பி. 13ஆவது திருத்தத்துக்கு எதிராக இதுகாலம் வரையிலும் தமது கடுமையான எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தார்கள். அது நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதைக்காக படுகொலைகளைக் கூடச் செய்தார்கள். அத்தகையவர்களுக்கு 13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக பேசுவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை.

அதேபோன்றுதான் சஜித் பிரேமதசவும் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைளின்போது எந்தவிதமான ஒத்துழைப்புக்களையும் செய்யாதே இருந்தார்.

தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் வடக்கு மக்களிடத்தில் சென்று 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகவும் அதுபற்றி உரையாடுவதாகவும் கூறுகிறார். இதுவொரு தேர்தல் கால ஏமாற்று நாடகம்.

சஜித்தையும், அநுரவையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்லர். சஜித்தும், அநுரவும் தமது அரசியல் சுயலாபத்துக்காகவே இப்போது வடக்கு, கிழக்கு நோக்கி வருகின்றார்கள் என்பதை அந்த மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.

No comments:

Post a Comment