ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன், பிற்போடும் முயற்சிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை - விஜயதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, June 23, 2024

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன், பிற்போடும் முயற்சிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை - விஜயதாச ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அடையாளம் கிடைக்காது விட்டாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடன் ஏற்கனவே உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் தரப்புக்களுடன் விரைவில் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதற்கு நீதிமன்றம் தடைகளை விதித்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றமைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை நீதிமன்றத்தின் ஊடாக நிறைவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயர்ப்பலகையை மட்டும் சிலர் வைத்திருகின்றார்கள். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பேருந்து எனது கையில்தான் உள்ளது. ஆகவே அந்தக் கட்சியின் வழக்கு விவகாரங்கள் எமது பயணத்தினை தடுத்து நிறுத்திவிட முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. வழக்கு விவகாரங்கள் நிறைவடைந்தால் அக்கட்சியின் ஊடாகப் போட்டியிடுவோம். இல்லையென்றாலும் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.

தேர்தல்கள் காலத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களைப் பேசி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் கலாசாரத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்லில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன். அந்த தீர்மானத்துக்கு அமைவாக போட்டியிடுவதில் உறுதியாக இருக்கின்றேன்.

அதேநேரம், வடக்கு, கிழக்கு மக்களுடன் உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் விரைவில் அம்மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்கட்சிகளுடன் உரையாடல்களை மேற்கொள்ளவுள்ளேன்.

தேசியப் பிரச்சினை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்களும், தென்னிலங்கை மக்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு காணப்பட வேண்டும்.

தேர்தல் அரசியலை மையப்படுத்தி வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் இனவாதத்தினை உயர்த்துவதன் மூலம் நன்மைகளை அடைவதற்கு எதிர்காலத்திலும் இடமளிக்க முடியாது. அந்த அரசியல் கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இதேநேரம், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான சில முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. அந்த முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அரசியலமைப்புக்கு அமைவாக உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.

ஆகவே தேர்தல் பிற்போடும் முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு ஜனநாயகத்தினை உறுதிப்படுத்துவற்றாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றார்.

No comments:

Post a Comment