பெண் என்பதற்கான வரைவிலக்கணம் சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை : உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது என்றார் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Thursday, June 20, 2024

பெண் என்பதற்கான வரைவிலக்கணம் சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை : உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது என்றார் சரத் வீரசேகர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கலாச்சாரம் ஊடாக நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் புதிய சட்டமூலங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்புக்கும், கலாச்சாரத்துக்கும் முரணானது. பெண் என்பது யார் என்பதற்கு போதுமான வரைவிலக்கணம் சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் தொடர்பில் பல பரிந்துகளை நாங்கள் முன்வைத்தோம். இருப்பினும் உரிய தரப்பினரால் அவை சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த சட்டமூலத்தில் பெண் என்பது யார்? என்பதற்கு முறையான வரைவிலக்கணம் குறிப்பிடப்படவில்லை.

பிறப்பால் பெண் என்று அடையாளப்படுத்தப்பட்டவருக்கு மாத்திரமே பெண்ணுக்கான அந்தஸ்த்தை வழங்க முடியும். ஆணாகப் பிறந்து மருத்துவ சிகிச்சை ஊடாக பெண்ணாக மாற்றமடைந்தவரை பெண்ணாகக் கருத முடியாது. ஆகவே சட்டமூலத்தில் பெண் என்பதற்கான வரைவிலக்கணம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

அத்துடன் திருமணம் என்பதற்கும் உரிய வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. ஆணாக பிறந்த ஒருவருக்கும், பெண்ணாகப் பிறந்த ஒருவருக்கும் இடையில் நிகழும் திருமணம் ஏற்றுக் கொள்ளப்படும். ஆண்களுக்கு இடையிலான திருமணத்தையும், பெண்களுக்கு இடையிலான திருமணத்தையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமணமாக அங்கீகரிக்க முடியாது.

கர்ப்பிணி என்பது யார் என்பதும் வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை. பிறப்பால் பெண்ணாக பிறந்த ஒருவருக்கு மாத்திரமே கர்ப்பிணி என்ற உயரிய அந்தஸ்தை வழங்க முடியும். இயற்கைக்கு முரணான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. இலங்கைதான் உலகில் முதல் பெண் பிரதமரை தோற்றுவித்தது.

ஆகவே நாட்டின் அரசியலமைப்பிலும், பௌத்த மத கோட்பாடுகளிலும் பெண்களுக்கும், ஆண்டுகளுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண் வலுவூட்டல் சட்டமூலத்தின் ஊடாக மறைமுகமாக கலாசாரத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

பால்நிலை சமத்துவம் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்று ரீதியில் பல ஆக்கிரமிப்புகளுக்கு முகம்கொடுத்துள்ளது. கலாச்சாரம் ஊடாக நாட்டை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் புதிய சட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

69 இலட்சம் மக்களாணைக்கு இது விரோதமானது நாங்கள் ஒருபோதும் இதற்கு இடமளிக்கமாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment