பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாக்.ஜலசந்தி மற்றும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் நோக்கிய எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை (28) இந்தியாவின் ‘ The Hindu’ நாளிதழ் வெளியான செய்தி தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘The Hindu’ நாழிதழ் புதிய ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் பற்றிய எந்தவிதமான உள்ளடக்கங்களையும் வழங்கவில்லை. அதேபோன்றுதான் கலந்துரையாடல்கள் பற்றிய விடயத்தினையும் குறிப்பிட்டுள்ளது. எனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அவ்வாறான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஆகவே, ‘The Hindu’ வெளியிட்ட தகவல்களுக்கு அமைவாக எந்தவிதமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment