வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை, மகன் படுகொலை : மருமகன் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, May 20, 2024

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை, மகன் படுகொலை : மருமகன் கைது

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொலை செய்து பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. 

இச்சம்பவம், மீரிகம மாலதெனிய பகுதியில் நேற்று அதிகாலை பதிவாகியுள்ளது. மூவரையும் கொலை செய்த நபர் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றபோது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மருமகன் ஒருவரையே கைது செய்ததாக, நால்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலைச் சம்பவத்தில்,மீ ரிகம மாலதெனிய பகுதியைச் சேர்ந்த நுகதேனி ஆராச்சிகே லயனல் பிரேமசிறி (வயது 78), அவரது மனைவி துலியாவதி ஜயலத் மெனிக்கே (80) மற்றும் அங்கவீனமுற்ற மகன் ஒருவரான நுகதேனி ஆராச்சிகே சுமுது பிரியசாந்த (42) ஆகியோர் உயிரிழந்தனர். இக்கொடூரச் சம்பவம் நேற்று (19) அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றது.

மாலதெனியவிலிருந்து மீரிகம நோக்கி சைக்கிளை தள்ளிச் சென்ற கொலையாளியை நிறுத்தி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.

2,55,000 ரூபா பெறுமதியான தங்க மோதிரம் மற்றும் தங்கச் சங்கிலி மற்றும் குறடொன்றும் அவரிடம் காணப்பட்டது. பின்னர் இச்சந்தேகநபர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.

இவரின் சட்டைப் பையில் மாலதெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் விலாசம் அடங்கிய காகிதத் துண்டு காணப்பட்டது. இதையடுத்து, வீட்டை பொலிஸ் குழுவினர் சோதனையிடச் சென்றபோதே, அங்கிருந்த அனைவரும் உயிரிழந்து கிடந்ததை அவதானித்தனர்.

மின்சார மீட்டருக்கு அருகாமையில் வீட்டுக்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் பிரதான மின்வயர் அறுந்து விழுந்து கிடந்ததை அவதானித்த பொலிஸார், குறடினால் மின்சாரத்தை துண்டித்து இக்கொலைகள் புரியப்பட்டதாக பொலிஸார் ஊகித்தனர்.

தாயும் தந்தையும் அவர்கள் உறங்கும் அறையிலும், ஊனமுற்ற மகனின் சடலம் வரவேற்பறையிலும் காணப்பட்டன. உயிரிழந்த மகனுக்கு இரத்தக் காயம் இருந்ததாகவும், அவர்கள் மூவரும் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர் எடுத்துச் சென்ற சைக்கிள் உயிரிழந்த சித்தப்பாவுக்கு சொந்தமானதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுண்டவர்கள் சந்தேகநபரின் மனைவியின் சித்தப்பாவும் சிறிய தாயும் அவர்களது மகனும் என தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர் சிலாபம் பஙடகதெனிய பகுதியைச் சேர்ந்த நபர் எனவும், அவர் அந்தப் பகுதியில் வேலை செய்து வருவதாகவும், அவ்வப்போது மனைவி வீட்டுக்குச் சென்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்தே வீட்டுக்குள் பிரவேசித்துள்ளார்.

குற்றப்பிரிவு பொலிஸ் ஆய்வாளர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

No comments:

Post a Comment