இம்மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 1, 2024

இம்மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் - ஜீவன் தொண்டமான்

எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை பொது மைதானத்தில் இன்று புதன்கிழமை (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின்னர் எம்மால் மே தினக் கூட்டம் நடத்த முடியவில்லை. கொரோனா, பொருளாதார நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள நேரிட்டது. இ.தொ.க முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்கள். 4 வருடத்தின் பின்னர் பாரிய மே தின கூட்டமொன்றை நடத்துகின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக பல்வேறு அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம்.

எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் என்றார்.

கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் மே தினக் கூட்டமும் பேரணியும் நடைபெற்றதுடன் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணப்படுகிறது.

மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு மலையக மக்களினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல்,பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தலைவி அனுஷியா சிவராஜா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment