சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் சௌபாக்கியம் கிட்டும் யுகத்தை உருவாக்க எனது தந்தை முயற்சித்தார். எனவே, அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியே காலத்தின் தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 31ஆவது சிரார்த்த தின நிகழ்வும், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகில் அமைந்துள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இன்று புதன்கிழமை (01) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், ரணசிங்க பிரேமதாச அவர்கள் கூட நாட்டில் இரண்டு பயங்கரவாத யுத்தங்களை எதிர்கொண்டிருந்த காலக்கட்டத்திலயே ஆட்சியைப் பிடித்தார்.
அவ்வாறானதொரு நிலை இருந்தும் நாட்டின் அபிவிருத்தியை அவர் ஒரு போதும் தடைப்படுத்தவில்லை. அவர் ஒருபோதும் பொருளாதாரத்தை சுருக்கவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினார்.
உண்மையாக, சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் சௌபாக்கியம் கிட்டும் யுகத்தை உருவாக்க முயற்சித்தார். அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியே காலத்தின் தேவை.
இந்த இலக்குகளை அடைவது எளிதான பயணம் அல்ல, சிரமங்கள் மற்றும் தடைகள் கொண்ட பயணம். இந்த இலக்குகளை பேச்சின் மூலம் பூர்த்தி செய்ய முடியாது. முழு நாட்டுக்கும் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். பதில்களும் தீர்வுகளும் நேர்மறையானதும் பயனுள்ளதுமாக இருக்க வேண்டும். இந்தத் தீர்வுகள் கால அட்டவணையை அடிப்படையாகக் கொண்டமைய வேண்டும்.
இருள் சூழ்ந்து கிடக்கும் நாட்டுக்கு வெளிச்சத்தை கொண்டுவர இன, மதம் சாதி, குலம், வர்க்கம், கட்சி வேறுபாடின்றி ஒன்றுபட வேண்டும். இந்த ஒன்றிணைவு, குடும்பம் மற்றும் நண்பர்களை பாதுகாப்பதாக அமைந்துவிடக்கூடாது. அரசியல் சந்தர்ப்பவாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தேசம், மக்கள், நாடு குறித்து சிந்தித்து, இவற்றின் தேவைகளில் கவனம் செலுத்தியே இந்த ஒன்றிணைவு இடம்பெற வேண்டும்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச குடும்பத்துக்கு முன் நாட்டைப் பற்றியே சிந்தித்து செயற்பட்டார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் நாட்டு மக்கள் அனைவரையும் நண்பர்களாக கருதி பணியாற்றினார். அந்த பயணத்தில் நாமும் செல்ல வேண்டும். அவர் வகுத்துள்ள அபிவிருத்தி இலக்குகளை விஞ்சும் யுகத்தை உருவாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களை நேசித்த எமது நாட்டு மக்கள் தற்போது வறுமையாலும் மேலும் பல பிரச்சினைகளினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலையில் புதிய சவால்களுக்கு புதிய தீர்வுகளை வழங்கும் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதே உண்மையிலேயே ரணசிங்க பிரேமதாசவை நினைவு கூருவதாக நான் கருதுகிறேன்.
எல்லா இடங்களிலும் ஜீவனோபாயம் வீழ்ச்சி கண்டு, வாழ்வாதாரங்களின் சரிவு ஏற்பட்டு, முழு நாட்டின் பொருளாதார செயல்முறை முடங்கி, நாட்டு மக்களின் துயரத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் நாம் உண்மையில் மக்களுக்காக முன்நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment