ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி இருந்த ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை (19) தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.
முன்னதாக, நேற்று (19) அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று (20) அடையாளம் காணப்பட்டன.
இந்தச் சூழலில் விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அந்த நாட்டு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அசர்பைஜான் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி ரெய்சி, அங்கிருந்து ஹெலிகொப்டரில் நாடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
சுமார் 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகொப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர் முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளித்தது.
அந்த ஹெலிகொப்டரில் இருந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட மேலும் பலர் உயிரிழந்துவிட்டனர்.
முன்னதாக,ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி சென்ற ஹெலிகொப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஒன்று முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது.
அடுத்தபடியாக, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகொப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்ட வெளியான நிலையில், தற்போது ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்ததை அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் தவிர்த்த மேலும் 3 பேர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
கடும் பனிமூட்டம் - மீட்புப் பணியில் சிரமம்
கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது.
விபத்து நடந்தது எங்கே?
ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் ஜனாதிபதி இலாம் அலியேவுடன் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
ஈரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கிலோ மீட்டர் முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகொப்டர் தரையில் மோதியுள்ளது.
ஹெலிகொப்டர் விழுந்த இடம் அடையாளம் காணப்பட்டது
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி சென்ற ஹெலிகொப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது.
வெப்பத்தின் மூலம் ஹெலிகொப்டரின் இருப்பிடத்தை கண்டறியும் துருக்கியின் பேரெக்டர் அகின்ஸி (Bayraktar Akinci) என்ற ஆளில்லா விமானம் வெப்பத்தின் மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட நீண்ட தூர ட்ரோனின் காட்சிகள், இரவில் ஒரு நிலப்பரப்பின் கழுகு பார்வை காட்சியையும், ஒரு மலைப்பகுதியில் தோன்றும் ஒரு இருண்ட புள்ளியையும் காட்டியது.
இது குறித்த விவரம் ஈரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.
ஹெலிகொப்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகொப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தது.
பல மணி நேர தேடுதலின் முடிவில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர்ஹோசைன் கோலிவாண்ட், 'நிலைமை நல்லவிதமாக தோன்றவில்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டர் இடத்தை "சில நிமிடங்களில்" அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ஹெலிகொப்டர் விழுந்து கிடப்பதாக கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் தோராயமாக 2 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"யாரும் உயிருடன் இருக்கும் அறிகுறி இல்லை"
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சியின் ஹெலிகொப்டரில் இருந்த யாரும் உயிருடன் இருப்பதற்கான "அறிகுறி எதுவும் இல்லை" என்று அரசு தொலைக்காட்சி கூறுகிறது.
ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, விபத்தில் ஹெலிகொப்டர் "முற்றிலும் எரிந்துவிட்டது" என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சியின் ஹெலிகொப்டர் முற்றிலும் எரிந்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது," என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஹெலிகொப்டரின் சிதைவு புகைப்படம்
ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏவின் சமூக ஊடக சேனல்களில் ட்ரோன் காட்சிகள் பகிரப்பட்டுள்ளன. இது ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகொப்டரின் சிதைவைக் காட்டுகிறது என்று நிறுவனம் கூறுகிறது.
ரெட் கிரசன்ட் படமெடுத்த அந்த காட்சிகள், மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது போல் காட்சியளிக்கும் தரைப் பரப்புக்கு அருகே ஹெலிகொப்டரின் வால் பகுதி தெரிகிறது.
அந்த இடத்தில் யாரும் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு ஈரானில் நேரிட்ட ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சியும், வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் பலர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சருடன் மேலும் 3 பேர் பெயர்கள் அறிவிப்பு
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் தவிர்த்த மேலும் 3 பேர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
தப்ரிஸ் நகரில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளை நடத்தும் இமாம் ஆயதுல்லா மொஹமது அலி அல்-இ ஹாஷெம், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநரான ஜெனரல் மாலிக் ரஹ்மதி மற்றும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு கமாண்டர் சர்தார் செயத் மெஹ்தி மௌசாவி ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டதாக ஈரான் அரசு செய்தி முகமையான ஐ.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.
ஹெலிகொப்டரில் இருந்த ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர்கள், ஹெலிகொப்டர் ஊழியர்கள் ஆகியோரின் பெயர்கள் இன்னும் வெளியாகவில்லை.
அஜர்பைஜான் 'ஆழ்ந்த' கவலை
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி ஹெலிகொப்டர் விபத்து பற்றிய செய்திகளைக் கேட்டதும், தான் "ஆழ்ந்த கவலை" அடைந்ததாக அஜர்பைஜான் ஜனாதிபதி இலாம் அலியேவ் கூறியுள்ளார்.
ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் இரண்டு அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் இப்ராஹிம் ரைசியுடன் அலியேவும் உடனிருந்தார்.
"ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரைசிக்கு நட்பு ரீதியில் விடை கொடுத்தேன். அதன் பிறகு ஈரான் உயர்மட்டக் குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் தரையில் மோதியது என்ற செய்தியால் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் சதியா?
ஈரானில் நடந்த ஹெலிகொப்டர் விபத்து குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், "அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடனான தனது உரையாடல்கள் இந்த கட்டத்தில் தவறான விளையாட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றன. ஆனால் நிலைமையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன்" என்றார்.
"ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான வடமேற்கு ஈரானில் மிகவும் மோசமான பனிமூட்டம் நிலவியது. இது ஒரு விபத்து போல் தெரிகிறது. எனினும் அது குறித்து முழுமையாக விசாரிக்கப்படுகிறது," என்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அவையின் ஆயுதப்படை சேவை கமிட்டிக்கான குடியரசுக் கட்சி தலைவரான மைக்கேல் வால்ட்ஸ் "இது நல்லதே" என்று கூறியுள்ளார்.
"இப்ராஹிம் ரெய்சி ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தவர்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.
"இப்ராஹிம் ரெய்சி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக திகழும்" என்று புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிக் ஸ்காட் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
"அவர் மறைந்து விட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
விபத்து குறித்து ஜனாதிபதிஜோ பைடனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment