SSW வீசா திட்டத்தின் கீழ் ஜப்பான் கனவை நனவாக்குங்கள் : இவ்வார இறுதியில் மன்னாருக்கு வருமாறு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 19, 2024

SSW வீசா திட்டத்தின் கீழ் ஜப்பான் கனவை நனவாக்குங்கள் : இவ்வார இறுதியில் மன்னாருக்கு வருமாறு அழைப்பு

சகுரா மலர் பூக்கும் ஜப்பான் பெரும்பாலான இலங்கையர்களின் கனவு நாடாக மாற்றமடைந்துள்ளது. எனவே, ஜப்பானில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பை வழங்கும் SSW (Specified Skilled Worker) வீசா திட்டத்தின் மூலம் உங்கள் ஜப்பானிய கனவுகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த வாய்ப்பு காணப்படுவதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், மனுஷ நாணயக்காரவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் ஜப்பான் கனவை நனவாக்க, ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் நடைபெறும் ஜயகமு ஶ்ரீ லங்கா நிகழ்ச்சிக்கு வருமாறு குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நீங்கள் ஜப்பானில் தொழிலுக்கு விண்ணப்பிக்க, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நடத்தப்படும் கூட்டுப் பரீட்சை திறன் மற்றும் ஜப்பானிய மொழிப் புலமையை உறுதிப்படுத்த வேண்டும்.

பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு ஜப்பானில் 5 ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு உள்ளது. SSW திட்டத்தின் கீழ், ஜப்பான் 14 வேலைவாய்ப்பு பிரிவுகளை அறிவித்துள்ளது, அதில் 6 பகுதிகளுக்கு இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

செவிலியர் பராமரிப்பு (Nursing Caregiving)
உணவு சேவை தொழில்துறை (Food Service industry)
விவசாயம் (Agriculture)
கட்டுமான பிரிவு (Construction)
கட்டட சுத்தம் செய்தல் (Building Cleaning)
விமானத் துறை (Aviation Field)

இவற்றில் தாதியர், உணவு சேவை தொழில், விவசாயம் மற்றும் விமானப் போக்குவரத்துக்கான திறன் சோதனைகள் தற்போது இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த துறைகளுக்கு அரச துறை மூலம் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பப்படுகிறது.

ஜப்பானில் வேலைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படைத் தகுதிகள்:

18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட இலங்கைப் பிரஜையாக இருத்தல்.

JFT அல்லது JLPTN 4 தேர்ச்சி பெற்றிருத்தல்.

அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்துறை தொடர்பாக நடத்தப்படும் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தாதியர்கள், தாதியர் தொழில்நுட்ப அறிவுக்கான திறன், ஆங்கிலம் அல்லது ஜப்பான் மொழியில் தேர்ச்சி ஆகிய இரண்டு தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

இவற்றுக்கு மேலதிகமாக சிறந்த தேக ஆரோக்கியம், உடலில் பச்சை குத்தி இருக்காதிருத்தல்

மேற்படி தகைமைகளை நீங்கள் கொண்டிருந்தால் ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவே அதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கி வருகிறது.

SSW திட்டத்தின் மூலம் ஜப்பானில் தொழில் வாய்ப்பைப் பெற்று உங்கள் ஜப்பானிய கனவை நனவாக்க நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) மன்னார் நகரசபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஜயகமு ஸ்ரீ லங்கா நடமாடும் மக்கள் சேவையில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment