இரு தரப்பும் இணைந்து முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையின் பின்னரே தீர்மானிக்க முடியும் - ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 24, 2024

இரு தரப்பும் இணைந்து முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையின் பின்னரே தீர்மானிக்க முடியும் - ஐக்கிய மக்கள் சக்தி

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையிலான விவாதத்தை நடத்துவதற்கான தினத்தை இரு தரப்பும் இணைந்து முன்னெடுக்கும் பேச்சுவார்த்தையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இந்த விவாதம் தொடர்பில் இரு தரப்பும் கலந்துரையாட வேண்டியது அவசியமாகும் என்று தேசிய மக்கள் சக்தியினால் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள விவாதத்துக்கான தினங்களைக் குறிப்பிட்டு தேசிய மக்கள் சக்தியினால் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மே மாதம் 7, 9, 13 அல்லது 14ஆம் திகதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வினவியபோதே நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தியின் கடிதம் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த கடிதத்தில் இரு கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விவாதத்துக்கான தினங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் பொருளாதார குழுக்களுக்கிடையிலான விவாதம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறெனில் அவர்களுக்கு பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் தொடர்பில் பொறுப்பில்லையா?

எவ்வாறிருப்பினும் வியாழக்கிழமை (25) நாம் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான சந்திப்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். மே மாதத்துக்குள் விவாதங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். தலைவர்களுக்கிடையிலான விவாதத்தைப் போன்று பொருளாதார குழுக்களுக்கிடையிலான விவாதமும் நடத்தப்பட வேண்டும்.

அத்தோடு அவர்களால் தனித்து தீர்மானிக்கப்பட்டுள்ள தினங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த தினங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் உள்ளன. எனவே இரு தரப்பும் ஒரே மேசையில் அமர்ந்து இணக்கம் காணப்படும் திகதியிலேயே விவாதம் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment