மியன்மார் சைபர் குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, April 12, 2024

மியன்மார் சைபர் குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள்

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள், தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

மியாவாடியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 56 இலங்கையர்களில் எட்டு பேர் மியன்மார் அரசாங்க அதிகாரிகளால் மார்ச் மாத தொடக்கத்தில் மீட்கப்பட்டு மியாவாடி மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் 6 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் குறித்த குழுவினரை நேற்றையதினம் (11) மியன்மார் குடிவரவு அதிகாரிகள் தாய் – மியன்மார் நட்புறவு பாலத்தின் ஊடாக தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட இலங்கையர்கள் நலமுடன் இருப்பதாகவும் தற்போது தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்புகள் என்ற பொய்யான தொழில் வாய்ப்புக்காக, சுற்றுலா வீசாக்களில் ஏமாற்றி அழைக்கப்பட்டு, மியன்மாரில் ஒரு மோசமான இன ஆயுதக் குழுவால் சிறைப்பிடிக்கப்பட்ட 60 இலங்கையர்களைக் கொண்ட குழுவின் அவலநிலை தொடர்பில் 2023 டிசம்பரில், ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.

அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) உள்ள ஒரு குறிப்பிட்ட முகவரால் துபாயில் தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு ஏமாற்றி, மியாவாடியில் இணைய அடிமை முகாமில் பணியாற்ற மியன்மாருக்கு கடத்தப்பட்டனர், அங்கு அவர்கள் இணைய மோசடிகளைச் செய்ய வேண்டிய பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களின்படி, அவர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தை திருடுவதற்காக காதலர்கள் போன்று நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் சொன்னதைச் செய்ய மறுத்தால், மின்சாரம் பாய்ச்சுதல், நீர் நிரம்பிய சிறைகளில் அடைத்தல், கைகளில் கட்டி தொங்க விடுதல், பட்டினியாக்குதல் போன்ற சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான Parnpree Bahiddha-Nukara உடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தொலைபேசியில் உரையாடினார்.

மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிவிவகார அமைச்சு, மனிதக் கடத்தலினால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியுள்ள சுமார் 56 இலங்கையர்களை மீட்டு நாட்டுக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

மியன்மார் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கைத் தூதரகம் கடந்த ஆண்டு பயங்கரவாதக் குழுவிடமிருந்து 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment