கடலில் சிக்கிய 380 கோடி ரூபாவுக்கும் அதிக ஐஸ், ஹெரோயின் : பிரதான படகில் 6 பேர், கைமாற்ற வந்த படகில் 4 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 14, 2024

கடலில் சிக்கிய 380 கோடி ரூபாவுக்கும் அதிக ஐஸ், ஹெரோயின் : பிரதான படகில் 6 பேர், கைமாற்ற வந்த படகில் 4 பேர் கைது

பல நாள் மீன்பிடிக் படகொன்றில் ரூ. 3,798 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 179 கிலோ 906 கிராம் ஐஸ் ( Crystal Methamphetamine) 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையின் தெவுந்தர முனையிலிருந்து தெற்கே சுமார் 133 கடல் மைல் (சுமார் 246 கி.மீ.) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையின் மற்றுமொரு வெற்றிகரமான புலனாய்வு நடவடிக்கையில் இப்போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி, இலங்கை கடலோரக் காவல்படையின் (SLCG) சமுத்திரரக்ஷா (Samudra Raksha) கப்பலின் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த மற்றொரு உள்ளூர் ஒரு நாள் மீன்பிடி இழுவை படகை சோதனையிட்ட கடற்படையினர், கைப்பற்றப்பட்ட பல நாள் இழுவை படகுடன் போதைப்பொருளை கைமாற்ற வந்ததாக சந்தேகிக்கப்படும் அதிலிருந்த 4 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கரைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த படகை, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்றையதினம் (13) காலி துறைமுகத்திற்கு வந்து பார்வையிட்டார்.

காலி துறைமுகத்தில் குறித்த இழுவைப் படகை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்த போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் அடங்கிய 17 கோணிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதில் 129 பொதிகளில், 13 கோணிகளில் அடைக்கப்பட்ட, சுமார் 179 கிலோ மற்றும் 906 கிராம் (பொதிகள் உள்ளடங்கலான நிறை) எடையுள்ள ஐஸ் மற்றும் 76 பொதிகளில், 4 கோணிகளில் அடங்கிய சுமார் 83 கிலோ மற்றும் 582 கிராம் எடையுள்ள ஹெரோயின் (பொதிகள் உள்ளடங்கலான நிறை) ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள் மற்றும் 2 மீன்பிடி இழுவை படகுகளுடன் சந்தேகநபர்கள் 10 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வெலிகம, இமதூவ, காலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 முதல் 54 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த தெரு மதிப்பு ரூ. 3798 மில்லியன் என கணக்கிடக்கப்பட்டுள்ளனது.

அதற்கமைய தற்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்ட, 2024 இல் இதுவரை இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது ரூ. 9300 மில்லியன் (ரூ. 930 கோடி) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment