கணினிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 14, 2024

கணினிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இணையத்தளம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வருவதால், அது தொடர்பில் கண்காணிப்புகளை முன்னெடுப்பதாக இலங்கை கணினி அவசர பெறுபேறுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

அந்த மன்றத்தின் பிரதம சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர், வருக தமுனுகொல இது தொடர்பில் தெரிவிக்கையில் இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில், 423 இணையத்தளம் மூலமான மோசடிகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக தெரிவித்து பெரும் மோசடிகள் இடம்பெறுகின்றன. அதேவேளை கரன்சி மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகள், பிரமிட் மோசடி போன்றவையே அதிகமாக இடம்பெறுகின்றன.

அந்த வகையில் கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் இந்த மோசடிகள் வேகமாக அதிகரித்துள்ளன.

2023 ஆம் ஆண்டு இணையத்தளம் மூலமான 1609 மோசடிகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் இவ்வாறான 110 மோசடிகள், பெப்ரவரி மாதத்தில் 213 மோசடிகள் மார்ச் மாதத்தில் 100 மோசடிகளும் பதிவாகியுள்ளன.

சில முறைப்பாடுகளில் நிதி மோசடி பதிவாகும்போது அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக் கொடுத்து, அதனை கணினி குற்றச்செயல் பிரிவுக்கு சமர்ப்பித்துள்ளோம்.

இணையத்தளம் மூலம் தமது நிர்வாணப் படங்களை வெளியிடப்போவதாக அச்சுறுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகளும் பதிவாகியுள்ளன.

2023ஆம் ஆண்டு அதுபோன்று 775 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் 1609 இணையத்தளம் மூலமான மோசடிகளும் பதிவாகியுள்ளன. சமூக வலைதளங்கள் மூலம் கணக்கு உருவாக்கப்பட்டு இவ்வாறு 5188 மோசடிகள் பதிவாகியுள்ளன.

சிறுவர்கள் தொடர்பான 98 சம்பவங்கள், நபர்களின் வங்கிக் கணக்குகளில் பிரவேசித்து மோசடிகளில் ஈடுபட்டு 7499 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment