அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்கள் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா - News View

About Us

About Us

Breaking

Friday, February 16, 2024

அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்கள் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா

நாட்டின் அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷான் மசாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கண்டி மாவட்டத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கண்டி தேசிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வைத்தியர் தற்போது அது 5 வது இடத்திற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் வெற்றியடைந்தமையே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையின்படி, கண்டியிலிருந்து 10 பிரிவுகள் நாட்டின் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தற்போது அந்த எண்ணிக்கை 02 ஆக குறைந்துள்ளது எனவும் அதன் பிரகாரம் கடந்த வருடம் 20% டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது அது 12% ஆக குறைந்துள்ளது.

இந்த அறிக்கைகளின்படி நாட்டின் அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

இதன்போது கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, மத்திய மாகாண ஆளுநர் லலித் வூ கமகே, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment