(இராஜதுரை ஹஷான்)
பாதுகாப்பு தரப்பினர் முறையாக செயற்பட்டிருந்தால் பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்திருக்கலாம், குண்டுத் தாக்குதல்களை தடுத்திருக்கலாம். பாதுகாப்பு தரப்பினர் கவனயீனமாக செயற்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து திணைக்களங்களின் வகிபாகம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு துல்லியமான புரிதலை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் பத்தரமுல்ல சுஹுருபாவிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (18) நடைபெற்றது.
அமைச்சர் டிரான்அலஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொரளை அனைத்து புனிதர்கள் ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கைக் குண்டு தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்து அவதானத்துக்குரியது. இந்த குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சக்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவாலயத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட குண்டு தொடர்பில் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமரா ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. தேவாலயத்தில் பணிபுரியும் ஊழியர் அந்த குண்டு சுற்றப்பட்ட பொதியை ஒரு இடத்தில் இருந்து பிறிதொரு இடத்துக்கு வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் ஊடாக பிறிதொரு நபர் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவதாக கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைய வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'உளவியல் ரீதியின் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது திருமண தினத்தன்று இந்த தேவாலயம் மற்றும் வைத்தியசாலை ஒன்றில் குண்டுகளை வைத்ததாகவும்'அந்த வைத்தியர் நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.
பொரளை அனைத்து புனிதர்கள் ஆலய குண்டு விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவு பெற்று சட்டமா அதிபருக்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் பேராயருக்கு ஏதேனும் தகவல் தெரியுமாக இருந்தால் அவர் அதனை தாராளமாக முன்வைக்கலாம் அதனை விடுத்து பொது இடங்களில் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கக் கூடாது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கத்தோலிக்க சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பினர் முறையாக செயற்பட்டிருந்தால் பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்திருக்கலாம், குண்டுத் தாக்குதல்களை தடுத்திருக்கலாம். பாதுகாப்பு தரப்பினர் கவனயீனமாக செயற்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆகவே குண்டுத் தாக்குதல் தொடர்பில் பேராயர் உட்பட கத்தோலிக்க சபையிடம் தகவல்கள் இருக்குமாயின் அவர்கள் அதனை பகிரங்கப்படுத்தலாம் என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 90% விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நான் தெரிவித்தேன். அதன் பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேராயர் உட்பட சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
நான் இந்த அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து இதுவரை பொலிஸாரின் 90 வீதமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக நான் பிரகடனப்படுத்துகின்றேன். ஆனால் விசாரணையில் நாம் காணாத விஷயங்கள் இருக்கலாம். அவருக்கும் மற்றவர்களுக்கும் அத்தகைய தகவல்கள் இருக்கலாம்.
எனவே, பேராயர் மற்றும் கத்தோலிக்க திருச்சபை எங்களுடன் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை அவதானித்து அதில் ஈடுபடுமாறும், அதன் பின்னர் அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாடி மேலதிகத் தகவல்கள் தெரிந்தால் ஒன்றிணைந்து ஆராய்ந்து தீர்வு காண உதவுமாறும் அழைப்பு விடுத்தேன் என்றார்.
No comments:
Post a Comment