பல்கலைக்கழகத்தில் பௌத்தம், முஸ்லிம், இந்து, கிறிஸ்துவம் என்ற எந்தவொரு வேறுபாடும் இருக்கக்கூடாது - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Friday, January 19, 2024

பல்கலைக்கழகத்தில் பௌத்தம், முஸ்லிம், இந்து, கிறிஸ்துவம் என்ற எந்தவொரு வேறுபாடும் இருக்கக்கூடாது - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும், மீண்டும் இன்று பல்கலைக்கழகத்தை திறந்துள்ளோம். இதனைத் திறக்க வேண்டுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக திறப்பதற்கான உதவிகளைச் செய்தார். அதற்காக அவருக்கும் அவருடைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் இஸ்தாபகரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் ஆரம்ப விழா நிகழ்வுகள் நேற்று (18.01.2024) வியாழக்கிழமை நடைபெற்றபோது அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இன்று எஸ்.எல்.ரீ. பல்கலைக்கழகத்தோடு இணைந்து இப்பாடத்தினை ஆரம்பித்துள்ளோம். எதிர்காலத்திலே இம்மாணவர்கள் அவர்களுக்கு நூறு வீதம் உத்தரவாதம் வழங்கப்படுகின்றது.
இங்கிருந்து வெளியேறுகின்ற மாணவர்கள் தொழிலைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் நாங்கள் மிகக்கவனமாக இருக்கின்றோம்.

அதற்காக நாங்கள் சிலஸ்கொம் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை முடித்தவர்களுக்காக ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களில் தொழிலைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை இப்பல்கலைக்கழகம் பெற்றுத்தரும்.

இப்பல்கலைக்கழகம் சகல இன மக்களுக்குமான சகல பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்களுக்குமான பல்கலைக்கழகம் இங்கு பௌத்தம், முஸ்லிம், இந்து, கிறிஸ்துவம் என்ற எந்தவொரு வேறுபாடும் இருக்கக்கூடாது.

இப்பல்கலைக்கழகம் இலங்கையில் மாத்திரமல்ல, ஆசிய நாடுகளுக்குள்ளயே அதிக தொழில்நுட்பத் துறையையும் அதிக வசதிகளையும் கொண்டு குறைந்த செலவிலே படிப்பதற்கான ஒரு பல்கலைக்கழகம். இங்கு அதிகூடிய வசதிகள் இருக்கும். அதேபோன்று, பாதுகாப்பு வசதிகளும் உறுதிப்படுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் இஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு விஞ்ஞான தொழில்நுட்ப சர்வதேச பல்கலைக்கழகத்தின் தவிசாளரும் பொறியலாளருமான ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், குறித்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தினசேகர, எஸ்.எல்.ரீ.சி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வேரஞ்சன் கருணாரத்தின, எஸ்.எல்.ரீ.சியின் தொழில்நுட்ப பீடாதிபதி கலாநிதி சம்பத்டிகல, எஸ்.எல்.ரீ.சியின் தலைமை அதிகாரி கலாநிதி அஸ்மின், செலாஸ் கொம் நிறுவன முன்னாள் தவிசாளர் ஆசிக் முகமட் அலி, பல்கலைக்க்ழக முகாமையாளர் எஸ்.எம்.தாஹிர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவு அனுமதிப்பத்திரம் சம்பிரதாயபூர்வமாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

முதலாம் கட்ட அனுமதியில் நாடு பூராகவுமிருந்து மூவினத்தையும் சேர்ந்த 700 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

3000 பேருக்கு அனுமதியுள்ளதாகவும் நூலகம், தங்குமிட வசதிகள் பொழுதுபோக்கு, சுகாதாரம், உடற்பயிற்சி, மருத்துவம் எனப்பல்வேறு வசதிகள் கொண்டதாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் என்று அதன் இஸ்தாபகர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment