காரைநகர் - மானிப்பாய் - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் மூளாய் பகுதியில் வீதியினை இடைமறித்து வீதியில் நெல் விதைத்து நூதனமான முறையில் பிரதேசவாசிகள் இன்று (10) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் - காரைநகர் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக வீதி அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் தற்காலிக புனரமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஆணைக்கோட்டை முதல் சுழிபுரம் வழக்கம்பரை வரை வீதி புனரமைப்பு பணிகளுக்குள்ளான நிலையில் வழக்கம்பரை முதல் பொன்னாலை வரையான வீதி எதுவித புனரமைபுக்களும் இன்றி வெள்ள நீர் தேங்கி குளம் போல காட்சியளித்து வருகின்றன.
இதனால், பொன்னாலை மற்றும் மூளாய் பகுதியினை சேர்ந்த விவசாயிகள், சிறுவர்கள், பொதுமக்கள் இணைந்து காரைநகர் மானிப்பாய் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மாட்டு வண்டிலை கொண்டு இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பொழுது வெள்ளத்தினால் நீந்தியா செல்வது?, ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்த பாரபட்சம்?, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா?, சைக்கிள் உடைகிறது சட்டை சேறாகிறது, நடந்து சென்றால் கால்கள் புண் ஆகிறது, அரச அதிகாரிகளே எங்களையும் பாருங்கள், வழக்கம்பரை முதல் பொன்னாலைவரை வாழும் மக்கள் மந்தைகளா? ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக வீதியில் குளம் போல சேதமடைந்து காணப்பட்டட பகுதியில் ஏர் கலப்பை பூட்டி கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து தேவாரம் பாடி ஏர் உழுவது போல ஆற்றுகை செய்து நெல் மணிகளை வீதியில் விதைத்தனர். தொடர்ச்சியாக உழவு இயந்திரங்களாலும் வீதி உழுவது போன்று ஆற்றுகை செய்து போராட்டகாரர்களால் நெல் விதைக்கப்பட்டது.
இதனையடுத்து கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள் எமக்கென இன்று வட்டுகோட்டை பகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்றி தவிக்கின்றோம். இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடமைக்கு இருக்கின்றார்கள்.
உள் வீதிகள் கூட புனரமைப்பு செய்யப்பட்டு சீராக காணப்படுகிறது. பாடாசலை மாணவர்கள், வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள், வாகன ஓட்டுனர்கள் என பலரும் இதனால் தமது அன்றாட வாழ்வியலை அச்சத்திற்குள்ளாக கடக்கின்றார்கள். விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
இதனை கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை வெகுவிரைவில் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக இவ்வீதிகளை விவசாய நிலங்களாக மாற்றுவோம் என தெரிவித்தனர்.
இதன் காரணமாக சுமார் ஒரு மணித்தியலமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. போராட்டத்தில் மூளாய் பொன்னாலை பகுதி சிறுவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாவகச்சேரி விசேட நிருபர்
No comments:
Post a Comment