இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்றுவதே தனது நோக்கமே தவிர, எந்தவொரு தரப்பாரையும் ஆதரிப்பதல்லதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தாம், எந்தத் தரப்புக்கும் ஆதரவளிக்கவில்லையெனவும், இலங்கை கிரிக்கெட்டை பாதுகாப்பதற்காக மட்டுமே முன்னிற்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் விளையாட்டுத்துறை சட்டத்தை முற்றாக மாற்றியமைக்க வேண்டுமெனவும் ‘சித்ரசிறி’ அறிக்கையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (09) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தபோதே, இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கட் கவுன்சில் இலங்கை கிரிக்கெட் தொடர்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், இலங்கை கிரிக்கெட்டில் சர்வதேச தாக்கம் ஏற்படாதவாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் சரியான நேரத்தில் நடைபெற்றதெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் நீதித்துறை செயற்பாடுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட சில அறிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, நான் அமைச்சருக்கு ஆலோசனை கூறியது, இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு சென்றால் தடுத்து நிறுத்தலாம் என்பதனாலாகும். இது குறித்து அமைச்சரவையில் விவாதித்தோம். எவ்வாறாயினும் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது.
கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமான சித்திரசிறி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக இடைக்கால குழுக்களை நியமிப்பது போதுமானதல்ல என எண்ணுகிறேன். இவை அனைத்தும் தற்காலிக தீர்வுகள். ஒரு முழுமையான சட்டவிதி மாற்றம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
கிரிக்கெட்டை ஆரம்பித்தவர்கள் ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோரே. அவ்வேளையில் பாடசாலை கிரிக்கெட்டை வளர்க்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் மூலம்தான் எங்கள் முதல் அணி முன்னுக்கு வந்தது. அதன் பின்னரே, 1996 அணி உருவாகி உலகக் கோப்பையை வென்றது.
அதனால் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க வேண்டும். நான் எந்த தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனக்கு ஒரே ஒரு தரப்பே. அது இலங்கை கிரிக்கெட் தரப்பு மட்டுமே. அதை மேம்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனக்குள்ள பயம் இதுபற்றி நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பேசியதுதான். அதனால், நாம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கையில் ஈடுபடுவோம். இன்று முன்வைக்கப்பட்ட இந்த யோசணையை அங்கீகரிப்போம் என்றார்.
No comments:
Post a Comment