கோப் குழுவின் தலைவராக இருப்பதற்கு ரஞ்சித் பண்டாரவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை : எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 16, 2023

கோப் குழுவின் தலைவராக இருப்பதற்கு ரஞ்சித் பண்டாரவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை : எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

கோப் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார கண்டி கிரிக்கெட் கெம்பஸ் திட்டத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அத்துடன் கிரிகெட் சபை தொடர்பான விசாரணைகளின்போது இவ்வாறான விடயத்தை வெளிப்படுத்தாமல் இருந்ததன் மூலம் அவருக்கு தொடர்ந்தும் கோப் குழுவின் தலைவராக இருக்க முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கண்டி கிரிக்கெட் கெம்பஸ் திட்டத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ள கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார, கிரிக்கெட் நிறுவனம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்போது இது தொடர்பாக அவர் வெளிப்படுத்தாமல் இருந்துள்ளார்.

அதனால் கிரிக்கெட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள கோப் குழுவின் தலைவர், தொடர்ந்தும் கோப் குழுவின் தலைவராக இருக்க முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.

அத்துடன் நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட, எதிர்க்கட்சித் தலைவரான எனக்கு அரச நிதிக்குழுவில் கருத்து தெரிவிக்க முடியுமா முடியாதா என வாக்கெடுப்பு நடத்தி, குழுவுக்கு வர முடியும் பேச முடியாது என எனது வாயை மூடினார்கள்.

ஆனால் கிரிக்கெட் சம்பந்தமான கோப் குழுவில் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார அமர்ந்துள்ளார். எந்த அடிப்படையில் அவர் கோப் குழுவில் அமர முடியும். அதற்கு அனுமதி வழங்கியது யார்? எதிர்க்கட்சித் தலைவருக்கு இல்லாத உரிமை கோப் குழுவின் தலைவரின் மகனுக்கு எவ்வாறு கிடைத்தது.

அதனால் இங்கு பாரியளவில் சட்டம் மீறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரான எனக்கு இல்லாத உரிமை எவ்வாறு கோப் குழுவின் தலைவரின் மகனுக்கு கிடைத்தது.

அதனால் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் தரவுகளுக்கு அமைய அவருக்கு தொடர்ந்தும் கோப் குழுவின் தலைவராக இருப்பதற்கு தார்மிக உரிமை இல்லை. அத்துடன் இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர், சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில், வெளியாள் ஒருவருக்கு கோப் குழுவில் அமர உரிமை இல்லை. ஆனால் தனது ஊடக செயலாளர் தனது மகன் என்று ரஞ்சித் பண்டார கூறியுள்ளார் என்றார். என்றாலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பதில் வழங்குகிறேன் என்றார்.

No comments:

Post a Comment