போலிப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது : காலம் செல்லச்செல்ல விலைகளும் குறையும் - அகிலவிராஜ் காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 16, 2023

போலிப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது : காலம் செல்லச்செல்ல விலைகளும் குறையும் - அகிலவிராஜ் காரியவசம்

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் நாட்டுக்கு மிகவும் சிறந்ததாகும். சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவும் அது தொடர்பில் தவறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். எனவே மக்கள் அவற்றை நம்பி ஏமாந்து விடக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் மிகச்சிறந்தவொரு வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும வேலைத்திட்டத்தின் ஊடாக 18 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டபோது 60 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை 183 பில்லியன் ரூபா இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூர்த்தி கொடுப்பனவைப்போன்று 1,000 அல்லது 2,000 ரூபா வழங்காமல், மிகக்குறைந்த வருமானம் பெறுவோருக்கு 15000 ரூபா வரை வழங்கப்படுகிறது. அடுத்த கட்டத்திலுள்ளோருக்கு 7,500 ரூபாவும், ஏனையோருக்கு 5,000 ரூபாவும் வழங்கப்படுகிறது.

அதேபோன்று 13 இலட்சம் அரச உத்தியோகத்தர்களுக்கு 10000 ரூபா சம்பளக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றுள்ள 7,300,000 பேருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவும் 2,500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான காப்புறுதி வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவற்றை தவிர இன்னும் என்ன செய்ய வேண்டும்? காலம் செல்லச்செல்ல பொருட்களின் விலைகளும் குறைவடையும். ஒரு சிலர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவும் இதனை தவறான விமர்சிக்கின்றனர்.

2022 இல் எவ்வாறான நிலைமை காணப்பட்டது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறான போலி பிரசாரங்களை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுத்ததனாலேயே இந்தியா இன்று முன்னேற்றமடைந்துள்ளது. நாமும் அவ்வாறானதொரு இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment