(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானதுடன், பாராளுமன்ற ஒழுங்குவிதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணானது என்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்றுத்துறையின் கட்டளைகள் பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. சட்டத்தை செயற்படுத்தும் எந்த நிறுவனங்கள் மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம்,உள்ளுராட்சிமன்றங்கள்,மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டு மக்களுக்கு பாராளுமன்றத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். வயதானவர்கள் தொடர்ந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
அமைச்சரவையின் அமைச்சர் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை விமர்சிக்கிறார். நீதியரசரின் பெயரை குறிப்பிட்டு கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். இதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். நீதிமன்ற கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை இல்லாதொழிக்கப்பட்டால் அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒருதலைபட்சமாக செயற்படுகிறார் என்பது யாவரும் அறிந்ததே. கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதம் (09) இடம்பெற்றது. பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரப்பட்ட போதும் அதற்கு சபாநாயகர் இடமளிக்கவில்லை.
பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய பிரேரணை மீது ஒரு உறுப்பினரேனும் வாக்கெடுப்பு கோரினால் அதற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் நேற்று (09) சபாநாயகர் அவ்வாறு செயற்படவில்லை.
பாராளுமன்ற ஒழுங்குவிதிகள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு முரணாகவே சபாநாயகர் செயற்படுகிறார்.
நிறைவேற்றுத்துறையின் கட்டளைகள் பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் கட்டளைகள் தற்போது விதிக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment