(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடலில் சைனட் கலக்கப்பட்டிருந்தமை பரிசோதனை அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சைனட் உடலில் கலந்ததுடன் மரணம் சம்பவிக்கும். மரணமடைந்ததன் பின்னர் கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் அழுத்தம் பிரயோகிப்பதற்கான அவசியம் என்னவென்பதை துறைசார் நிபுணர்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை. அறிக்கை கிடைத்ததன் பின்னர் வழக்கு தாக்கல் செய்யப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற அமர்வின்போது வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் மேலும் உரையாற்றியதாவது, வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட மற்றும் பொதுப்படுத்தப்பட்ட விடயங்களை மாத்திரமே என்னால் குறிப்பிட முடியும்.
வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் பேராசிரியர் அசேல மென்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த குழுவில் நால்வர் ஒருமித்த கருத்தை முன்வைத்துள்ள நிலையில் பேராசிரியர் ருவன்புர மாறுப்பட்ட கருத்தை முன்வைத்துள்ளார்.
தினேஷ் சாப்டரின் கழுத்து மற்றும் முகப் பகுதியில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் அல்லது நெரித்தல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என நால்வர் முன்வைத்த கருத்துக்கு மாறுப்பட்ட வகையில் பேராசிரியர் ருவன்புர சாப்டரின் மரணம் சூட்சமமான ஒரு கொலை என்று குறிப்பிட்டுள்ளார்.
சாப்டரின் உடல் கூறுகளை கொண்டு முதல் குருதி பரிசோதனை, இரண்டாம் குருதி பரிசோதனை, வயிற்றுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் இருந்த உணவு கூறுகள் மற்றும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் கோப்பை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் சமர்ப்பித்த பரிசோதனை அறிக்கையில் முதல் குருதி பரிசோதனையில் 6.9 மில்லி கிராம் சைனட் குருதியில் கலக்கப்பட்டிருந்ததாகவும், இரண்டாம் குருதி பரிசோதனையில் 2.9 சைனட் குருதியில் கலக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வயிற்று பகுதியில் இருந்து உணவு மற்றும் ஏனைய பகுதிகளில் 4.9 சைனட் கலக்கப்பட்டிருந்ததாகவும், பிளாஸ்டிக் கோப்பையில் சைனட் அல்லது வேறு விஷ பதார்த்தங்கள் இருக்கவில்லை என்று அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடலில் சைனட் கலக்கப்பட்டிருந்தமை பரிசோதனை அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சைனட் உடலில் கலந்ததுடன் மரணம் சம்பவிக்கும். மரணமடைந்ததன் பின்னர் கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் அழுத்தம் பிரயோகிப்பதற்கான அவசியம் என்ன என்பதை துறைசார் நிபுணர்கள் நீதிமன்றத்துக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அறிக்கை கிடைத்ததன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment