முச்சக்கர வண்டி சாரதியை பின்புறமிருந்து தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்த பெண் ஒருவரை அளவத்துகொடைப் பொலிஸார் நேற்றுமுன்தினம் (15) கைது செய்துள்ளனர்.
இது பற்றித் தெரியவருவதாகவது, குறித்த பெண் அங்கும்புற பிரதேசத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துச் சென்று மாத்தளை பிரதேசத்தில் சுற்றித் திரிந்து விட்டு மீண்டும் அங்கும்புறைக்கு வரும் வழியில் சாரதியை அவரது வண்டியில் வைத்து பிற்புறத் தலையில் இரும்பு சுத்தியலால் தாக்கி இரண்டு இலட்ச ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் கைதான பெண் மாத்தளைப் பிரதேசத்திலுள்ள ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்றுள்ளதுடன் பழு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு வீராங்கனை எனவும் தெரிய வந்துள்ளது.
அதேநேரம் 22 வயதுடைய சந்தேக நபரான பெண், இராணுவ வீரர் ஒருவரைத் திருமணம் செய்து தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவ தினம் மாத்தளையில் உள்ள தனது நண்பி ஒருவரிடம் கடனாகப் பணம் பெற அவரைத் தேடிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நண்பியை சந்திக்க முடியாமற்போய் திரும்பி வரும் வழியில் ஒதுக்குப் புறமான ஒரு பாதையில் வைத்து முச்சக்கர வண்டி சாரதியை தாக்கி உள்ளார்.
இரும்பு சுத்தியல் ஒன்றால் அவரது தலையில் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அச்சமயமே சாரதியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த சாரதி எழுப்பிய அபயக் குரல் காரணமாக அயலவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். அப்போது முச்சக்கர வண்டி சாரதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முட்பட்டதாகவும் தான் அதிலிருந்து தப்பிக் கொள்ளத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இருவரது கதையையும் கேட்ட பொதுமக்கள் இருவரையும் அளவத்துகொடைப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். அதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மரம் ஒன்றின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முச்சக்கர வண்டி சாரதி அங்கும்புற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரான பெண்ணை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது 20ஆம் திகதி வரை தடுத்து வைக்கும்படி கண்டி நீதவான் உத்தரவிட்டார்.
அக்குறணை குறூப் நிருபர்
No comments:
Post a Comment