(இராஜதுரை ஹஷான்)
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டில் மிகுதியாகவுள்ள சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை உட்பட ஆடை உற்பத்தி தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடையும். மின் பாவனையாளர்கள் மீது சுமையை திணிக்காமல் நிறுவன மட்டத்தில் செலவுகளை குறைத்துக் கொள்ள மின்சார சபை நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை கோரிக்கை விடும்போது அதற்கு சாதகமான முறையில் அனுமதி வழங்குவது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடமையல்ல, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின் பாவனையாளர்கள் சார்பில் இருந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
எரிபொருள் விலையேற்றத்தைப் போன்று தற்போது மின் கட்டணமும் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது. மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சார விநியோக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு மாத்திரம் மூன்று தடவைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. சடுதியான மின் கட்டண அதிகரிப்பால் மின்பாவனை குறைவடைந்துள்ளதால் தேசிய மட்டத்திலான தொழிற்றுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் கட்டண அதிகரிப்பால் பலர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதியுதவி தாமதமடைந்ததை தொடர்ந்து மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் நாட்டில் மிகுதியாகவுள்ள சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிற்றுறை உட்பட ஆடை உற்பத்தி தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடையும்.
நாட்டில் கடந்த மூன்று மாத காலமாக நிலவிய வரட்சியால் நீர் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டது. எதிர்கால தேவையை கருத்திற் கொண்டு மின் கட்டணத்தை அதிகரிக்க வலியுறுத்தியதாக மின்சார சபை குறிப்பிடுகிறது.
மின்பாவனையாளர்கள் மீது சுமையை திணிக்காமல் நிறுவன மட்டத்தில் செலவுகளை குறைத்துக் கொள்ள மின்சார சபை நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment