அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப் பொருள் : சாரதி தப்பியோட்டம், ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, October 2, 2023

அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப் பொருள் : சாரதி தப்பியோட்டம், ஒருவர் கைது

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் அம்புலன்ஸ் வண்டியில் ஐஸ் போதைப் பொருள் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேகநபரான அம்புலன்ஸ் சாரதி தப்பியோடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவனருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையைச் சேர்ந்த சாரதி ஒருவரும், வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியரும் 179 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப் பொருளுடன் சனிக்கிழமை இரவு முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்திற்கு அம்புலன்ஸில் வருகை தந்த நிலையில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரியை கடித்து தாக்கிய நிலையில், பிரதான சந்தேகநபரான அம்புலன்ஸ் வண்டி சாரதி தப்பி ஓடியுள்ளார். மற்றைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு, அம்புலன்ஸ் வண்டி மற்றும் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த அம்புலன்ஸ் வண்டி சாரதியான பிரதான சந்தேகநபர் முன்னதாக பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் வண்டி பல தடவைகள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு சந்தேகநபர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச அம்புலன்ஸ் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டமை பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment