(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் எதிரணியின் சுயாதீன பாராளுமன்ற குழுவினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரியதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (06) 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி அலுவலர்களுக்காக பேணிவரப்படுகின்ற சேமலாப நிதியத்தின் கணக்கு மீதிக்கென 2022 ஆம் ஆண்டில் வழங்கிய வட்டி வீதம் மற்றும் அந்த வருடத்தில் ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்பட்டுள்ள வட்டி வீதம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கப்பட்ட வட்டி வீதம் தொடர்பில் எழுப்பபட்ட கேள்விகளுக்கே அரசாங்கம் கால அவகாசம் கோரியது.
பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (06) காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரிடம் எதிரணியின் சுயாதீன குழு உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு இரண்டு வார கால அவகாசம் கோருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்தார்.
இதன்போது இது கடந்த வருடத்துடன் தொடர்புடைய விடயம் என்றும், இதற்கு முன்னர் இந்த கேள்விக்காக இரண்டு மாதம் கால அவகாசம் எடுத்திருந்தது. தொடர்ந்தும் இதற்காக கால அவகாசம் கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட சுயாதீன அணி எம்.பிக்கள் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து எதிர்ப்புகளை முன்வைத்தனர்.
இதன்போது சபையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த சபைக்கு தலைமை தாங்கிய அங்கஜன் இராமநாதன் தொடர்ந்தும் முயற்சித்தபோதும், அவர்கள் தொடர்ந்தும் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காலை 10.10 மணியளவில் 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் மீண்டும் சபை நடவடிக்கைகள் 10.20 மணிக்கு ஆரம்பமாகி வழமைபோன்று நடைபெற்றது.
No comments:
Post a Comment