எத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்நோக்க நேர்ந்தாலும் பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் பின்வாங்கப் போவதில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கைகளால் பாதாள உலகக் குழு நபர்களும் போதைப் பொருள் வர்த்தகர்களும் அச்சமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்காலங்களில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுவினருக்கு எதிரான நடவடிக்கைகளில் பலராலும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயமின்றி தமது கடமையை நிறைவேற்றி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலகக் குழு நபர்கள் இருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினரையும் படுகொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
தமக்கு விடுக்கப்பட்டுள்ள அவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார். அவர் நீர்கொழும்பு பகுதியில் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் கடமை புரிபவராவர்.
இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடொன்றில் இருந்து செயற்பட்டு வரும் பாதாள குழுவைச் சேர்ந்தவரே அவ்வாறான அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் எந்த அச்சுறுத்தலுக்கும் பயந்து அதற்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லையென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment