அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதால் மாற்றம் செய்யக்கூடாது : கட்சி மத்திய குழுவில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 13, 2023

அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதால் மாற்றம் செய்யக்கூடாது : கட்சி மத்திய குழுவில் தீர்மானம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியை படிப்படியாக முன்னுக்கு கொண்டுவருவதற்காக கட்சியின் தற்போதைய தலைவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்துள்ளனர். இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து அந்த தலைவர்கள் ஊடாக கொண்டுசெல்வதற்கான பலம் இருக்கிறது. அதனால் கட்சியில் தற்போது பதவி நிலைகளில் இருப்பவர்களை எந்த மாற்றமும் செய்யக்கூடாது என கட்சி மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை (12) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கட்சி மத்திய குழுக் கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனம் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற இருக்கிறது. அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடவே கட்சி மத்திய குழு கூடி இருந்தது. இதன்போது சம்மேளனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் கட்சி சம்மேளனத்தின்போது கட்சியின் பதவிகளில் மாற்றம் ஏற்படப்போவதாகவும் முக்கிய பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பிரசாரமாகி வருவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கஷ்டமான நிலையில் கட்சியை படிப்படியாக முன்னுக்கு கொண்டுவருவதற்காக கட்சியின் தற்போதைய தலைவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்துள்ளனர். இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து அந்த தலைவர்கள் ஊடாக கொண்டுசெல்வதற்கான பலம் இருக்கிறது. அதனால் கட்சியில் தற்போது பதவி நிலைகளில் இருப்பவர்களை எந்த மாற்றமும் செய்யக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்தனர். அதன் பிரகாரம் கட்சி பதவிகளில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கட்சி சம்மேளனத்தின்போது மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் முழுமையாக கலந்துரையாடி முடிவுக்கு வர முடியாமல் போனதால், இன்று மாலை (நேற்று) மீண்டும் ஜனாதிபதி தலைமையில் கூடி கலந்துரையாட தீர்மானித்தோம் என்றார்.

இதேவேளை, மத்திய குழுக் கூட்டத்தின்போது ரவி கருணாநாயக்கவுக்கு கட்சியின் பிரதித் தலைவர் பதவி அல்லது பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது தற்போதைக்கு கட்சி பதவிகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை என கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் தவிசாளர் பதவிகளைத் தவிர ஏனைய அனைத்து பதவிகளையும் நீக்கிவிட்டு தலைமைத்துவ சபை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இதற்கு முன்னர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அந்த பிரேரணையை செயற்படுத்த தேவையில்லை எனவும் மத்திய குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment