எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக செயற்படப்போவதில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக முன்வைத்துவரும் சில கருத்துக்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிரேஷ்ட உப தலைவர் கயந்த கருணாதிலக ஆகியோரடங்கிய குழு அவரைச் சந்தித்துள்ளது. அந்த விசேட கலந்துரையாடலின்போது, சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கை யில், கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானங்கள் தவறானது. ஜனாதிபதியொருவரை தெரிவு செய்யும் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் டலஸ் அழகப்பெருமவை நிறுத்தியமை தவறானதாகும்.
அது தொடர்பில் கட்சித் தலைமை எடுத்த தீர்மானம் தவறானது அவ்வாறு அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் செயற்பாடுகளை அவரால் முன்னெடுத்திருக்க முடியுமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக சஜித் பிரேமதாசவை அழைத்தபோது அவர் அதை நிராகரித்தமை தவறு என்றும் தெரிவித்துள்ள அவர், அது தொடர்பிலும் விமர்சித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment