கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பாராளுமன்ற அமர்வுகள் எதற்கு? - அஜித் மான்னப்பெரும - News View

About Us

About Us

Breaking

Friday, October 20, 2023

கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பாராளுமன்ற அமர்வுகள் எதற்கு? - அஜித் மான்னப்பெரும

(எம்.வை.எம்.சியாம்)

செங்கோல் முக்கியமானது. செங்கோலைப் போன்றே பாராளுமன்றமும் முக்கியமானது. செங்கோலுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். கேள்வி எழுப்பக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்று பதில் கிடைக்காமல் போகும்போது அதனை பெற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதன் முக்கியத்துவம் விளங்கவில்லை என்றால் பாராளுமன்ற அமர்வுகள் எதற்கு என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

வியாழக்கிழமை (19) வாய் மூலம் விடைக்கான கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிந்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கேள்விக்கான பதில்களை வழங்காமல் சபைக்கு சமர்ப்பித்ததாகத் தொடர்ந்து சபையில் பெரும் களேபரம் ஏற்பட்டதுடன் இதன்போது எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும செங்கோலை எடுக்க முயன்றார்.

இதன் காரணமாக சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள்ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அதன் பின்னர் நிலையியற் கட்டளையின் 77 கீழ் 3 இன் பிரகாரம் இது பாராதுரமானது எனவும் செங்கோல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் பிரவேசித்து செங்கோல் மீது கை வைத்தமையால் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும 4 வாரங்களுக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்கவும் சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும விளக்கமளித்தார்.

4 வாரங்களுக்கு எனக்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நல்லது என நினைக்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்தவே மக்கள் போராடினார்கள். அந்த மாற்றத்தை என்னால் மேற்கொள்ள முடியவில்லை என்றால் இந்த தடையை ஏற்றுக் கொள்கிறேன். பாராளுமனற்த்தில் 6 மாதங்களுக்கு பின்னரே எமக்கு கேள்வி எழுப்பக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பாக 10 உறுப்பினர்களுக்கே கேள்வி எழுப்பக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும். எமக்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போகும்போது அதனை பெற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? கேட்கும் கேள்விக்கு பதில் வழங்காமல் அதனை புறக்கணிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

நான் நாட்டு மக்களின் பிரச்சினைகளையே வினவினேன். கேள்விக்கு பதில் வழங்குமாறு சபாநாயகரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கூறினார். இருப்பினும் அவர் 10 நிமிடங்கள் எந்த பதிலையும் வழங்கவில்லை.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் சபாநாயகரின் கட்டளையை அமைச்சரே மீறி செயல்பட்டுள்ளார். அவரே இதன்போது தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று என் மீது தடை விதித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நாட்டு மக்களுக்கு பாராளுமன்றம் மீது நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பாராளுமன்ற அமர்வுகள் எதற்கு?

நீண்ட நாட்களாக நீங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறீர்கள். செங்கோலின் மீது கை வைத்தமை பிழையில்லையா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. செங்கோல் முக்கியமானது. செங்கோலைப் போன்றே பாராளுமன்றமும் முக்கியமானது. செங்கோலுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். சபாநாயாகரையும் மதிக்கிறேன். பாராளுமன்றத்தினுள் அவரே எமது தலைவர். அதன் முக்கியத்துவம் விளங்கவில்லை என்றால் ஜனநாயகம் எதற்காக என்று வினவுகிறேன். என் மீது எந்த தவறும் கிடையாது என்றார்.

No comments:

Post a Comment