இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 17, 2023

இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (புதன்கிழமை) இஸ்ரேலுக்குப் பயணம் செய்யவுள்ளதாக, தற்போது இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.

ஜெருசலமில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், பிளிங்கன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையேயான ஏழு மணி நேர சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி பைடன் இஸ்ரேலுக்குச் செல்வார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்யும்போது ‘இஸ்ரேலின் போர் நோக்கங்கள் மற்றும் மூலோபாயம் பற்றிய விரிவான தகவலைப்’ பெறுவார், என பிளிங்கன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், ‘பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்கும் விதத்தில் இஸ்ரேல் எவ்வாறு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்பதையும், இஸ்ரேல் காஸாவில் உள்ள பலஸ்தீனியப் பொதுமக்களுக்கு உதவிகளை அனுப்ப என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதையும் கேட்டறிவார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் பைடனின் பயணம் அமையவிருக்கிறது.

இது குறித்துப் பேசிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, புதன்கிழமை இஸ்ரேலின் டெல் அவிவில் தரையிறங்கும்போது ஜனாதிபதி பைடன் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் ‘ஒரு முக்கியமான தருணத்தில்’ அங்கு செல்வார் என்று கூறினார்.

பைடனின் முக்கியக் குறிக்கோள்கள், இஸ்ரேலுக்கு ‘அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்துவது’ மற்றும் ‘காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவது’ என்று கிர்பி கூறினார்.

மேலும், ஹமாஸுக்குப் பயனளிக்காத வகையில், மனிதாபிமான உதவிகள் வழங்குவது பற்றி அவர் விவாதிப்பார் என்று கிர்பி கூறினார்.

காசாவை விட்டு வெளியேற விரும்பும் பொதுமக்களுக்காக ‘பாதுகாப்பான பாதையை’ உருவாக்கவும் பைடன் முனைவர் என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் ஏற்கனவே இடைவிடாத வான் வழித் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பலஸ்தீனியர்களைக் கொன்றிருக்கிறது, மேலும் காஸாவிற்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றைத் தடுத்து, அதை மனிதாபிமான நெருக்கடியில் மூழ்கடித்துள்ளது.

No comments:

Post a Comment