கோட்டாவுக்கு அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிக்கா - News View

About Us

About Us

Breaking

Monday, October 2, 2023

கோட்டாவுக்கு அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிக்கா

சி.சி.என்

சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இலங்கையின் சீனத் தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் சந்திரிக்கா பண்டாரநாயக்க ரணதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிகளில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் நால்வருக்கும் ஒரே மேசையில் அமர்வதற்கான நான்கு நாட்காலிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தான் கோத்தாபய ராஜபக்ஷ அருகில் அமர்வதை விரும்பாது அருகிலுள்ள மேசையை தனக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு சென்ஹொங் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் மிக முக்கிய பிரமுர்கள் வரிசையில் இந்த நால்வரே பிரதானமாக இடம்பிடித்திருந்தனர்.

சீனத் தூதுவர் இந்த நால்வரின் ஆசனங்கள் குறித்து அதிக சிரத்தை எடுத்ததாகத் தெரிகின்றது. எனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அருகில் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆசனம் இருந்ததால் சந்திரிக்கா அவர் அருகில் அமர்வதை விரும்பியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சிக் காலத்தில் ரணில் மற்றும் மைத்திரியுடன் இணைந்து பயணித்த சந்திரிக்கா இடையில் மைத்திரி மஹிந்தவை திடீரென பிரதமராக்கி நாடாளுமன்றத்தைக் கலைத்தவுடன் அவரை கடுமையாக விமர்சித்திருந்தமை முக்கிய விடயம்.

எனினும், சுதந்திர கட்சியின் தலைவராக அந்நேரம் மைத்திரி இருந்த காரணத்தினால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதேவேளைதான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்த மஹிந்தவும் அதன் பிறகு சந்திரிக்காவை ஓரங்கட்டிவிட்டு சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றினார்.

கோத்தாபய ஜனாதிபதியாவதை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்தவர் சந்திரிக்கா. அவர் இடையில் நாட்டை விட்டு வெளியேறியவுடன் ஜனாதிபதி பதவிக்கே இழுக்கு ஏற்படுத்தியவர் என சந்திரிக்கா ஒரு சந்தர்ப்பத்தில் கோத்தாபயவை விமர்சித்திருந்தார்.

கூறப்போனால், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, மைத்திரி, கோத்தாபய ஆகிய மூவர் மீதும் சந்திரிக்கா வெறுப்புடனேயே இருக்கின்றார்.

எனவே, அன்றைய நிகழ்வில் இந்த மூன்று பேருடனும் அமர்வதற்கு அவர் விரும்பியிருக்கவில்லையென்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன மக்கள் குடியரசு 1950ஆம் ஆண்டு உருவானபோது அந்த நாட்டை தெற்காசியாவில் முதன் முதலாக ஏற்றுக் கொண்ட நாடு இலங்கையாகும். மேலும் சீன - இலங்கை உறவுகள் ஆயிரம் வருடங்களை கடந்ததாகும்.

கி.பி.410ஆம் ஆண்டு சீனாவின் புகழ்பெற்ற ஜின் வம்ச துறவியான பாக்சியன் இலங்கைக்கு வருகை தந்து தான் சீனாவிலிருந்து கொண்டு வந்த புத்த மத நூல்களை அடிப்படையாகக் கொண்டு புத்த இராச்சியத்தின் பதிவுகள் என்று நூலை எழுதியமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மாதோட்டம் என்று அழைக்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே சீன வணிகர்கள் வந்தமைக்கான சான்றாதாரங்களும் உள்ளன. சிறிமா அரசாங்கத்தின்போது சீனா அரசாங்கம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தை தனது நிதியில் அமைத்து கொடுத்தது.

பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை துறைமுகத்தையே சீனாவுக்கு வழங்கி விட்டார். மத்தள விமான நிலையமும் சீன நிதியுதவியுடன் நிறைவு செய்யப்பட்டது.

எல்லாவற்றையும் விட கொழும்பு நிதி நகரை சீனாவுக்கு மஹிந்த தாரை வார்த்து விட்டமையும் உலகமே அறியும்.

அந்த வகையில் இலங்கை ஜனாதிபதிகளை சீனா என்றுமே தனிப்பட்ட ரீதியில் கெளரவித்து கவனிக்கும் முகமாகவே அன்றையதினம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோத்தாபய மீது மக்கள் எதிர்ப்பு இன்னும் இருப்பதாலும் அவரது காலத்தில் கொண்டுவரப்பட்ட சில கொள்கைகள் நாட்டுக்கு ஏற்புடையதாக இல்லாததாலும் அதை பல தடவைகள் தான் விமர்சித்த காரணத்தினால் அவருக்கு அருகில் அமர்வதை சங்கடமாக உணர்ந்துள்ளார் சந்திரிக்கா.

மேலும், அவருக்கு அருகில் அமர்ந்திருந்தால் நிச்சயம் அவர் தன்னுடன் நாகரிகம் கருதி கதைக்க முற்படுவார். இதை ஊடகங்கள் திரிபுபடுத்தி செய்தியாக போட்டுவிட்டால் தனது பெயரும் மக்கள் மத்தியில் விமர்சிக்கப்படும் என்ற காரணங்களினால் அவர் அவருக்கு அருகில் அமர்வதை விரும்பியிருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment