இலங்கை அணியுடன் இணைய மெத்திவ்ஸ், துஷ்மந்தவிற்கு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 19, 2023

இலங்கை அணியுடன் இணைய மெத்திவ்ஸ், துஷ்மந்தவிற்கு அழைப்பு

இலங்கை அணியின் சகல துறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியில் இணைவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரமோத் மதுஷானை அணியில் இணைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இலங்கை அணியின் பலவீனமான பந்துவீச்சை வலுப்படுத்தும் வகையில் முழுமையாக குணமடைந்த அனுபவமிக்க பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீரவை அணியில் இணைக்க தெரிவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை, காயம் காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க குணமடைந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, தசுன் ஷானக்க சிறப்பாக பயிற்சியில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது.

லக்னோவில் உள்ள ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எகனா விளையாட்டரங்கில் இன்று (19) காலை இலங்கை அணி பயிற்சியில் ஈடுபட்டபோது, தசுன் ஷானக்கவும் வழக்கமான பயிற்சியில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, இன்று காலை இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவத்திற்கும், இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இன்றிரவு இந்தியா செல்வதற்கு தயாராகுமாறு அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோருக்கு தொலைபேசியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவரும் நாளை இலங்கை அணியில் இணைய உள்ளனர்.

ஆயினும் வீரர் ஒருவர் காயம் அடையும் வரை அவர்களில் எவருக்கும் விளையாடுவதற்கு சட்டப்படி அனுமதி இல்லை.

ஆனால், காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தசுன் 4 நாட்களுக்கு முன்பு அணியை விட்டு வெளியேறினார். அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்ததோடு, தசுன் ஷானக்க காயத்தில் இருந்து குணமடைய சுமார் 3 வாரங்கள் எடுக்குமென மருத்துவ குழு கூறியிருந்தாலும், அவர் தற்போது பயிற்சியில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதற்கு முன்னர் தசுன் ஷானக்கவுக்கு தேவையான சிகிச்சைகளை இந்தியாவில் இருந்து மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அவர் இலங்கை அணியில் மேலதிக வீரராக தொடர்ந்தும் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தசுன் ஷானக்கவிற்கு பதிலாக மேலதிக வீரராக இருந்த சாமிக்க கருணாரத்ன இணைக்கப்பட்டதோடு, அவர் வகித்த அணித்தலைவர் பதவியில் குசல் மெண்டிஸுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment