வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்

(எம்.வை.எம்.சியாம்)

பரீட்சைக்குப் பின்னர் வினாத்தாள்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதன் மூலம் பரீட்சையின் இரகசியத்தன்மை பாதிக்கப்படாது. எவ்வாறாயினும் வினாத்தாள்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். பரீட்சை வினாத்தாள்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாநாயாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 888 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றது. இதன்போது 3 இலட்சத்து 37 ஆயிரத்து 956 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

எவ்வாறாயினும், பரீட்சை நிறைவடைந்து குறுகிய நேரத்துக்குள் பரீட்சை வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாநாயாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் கூறுகையில், புலமைப் பரீட்சைக்குப் பின்னர் வினாத்தாள்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதன் மூலம் பரீட்சையின் இரகசியத்தன்மை பாதிக்கப்படாது. இருப்பினும் பரீட்சை நிறைவடைந்து வீடு சென்ற பிள்ளைகளிடம் பரீட்சை வினாத்தாள்களை மீள விவாதிப்பது அவர்களை மிகவும் மனஉளைச்சலுக்குள்ளாக்கும்.

எவ்வாறாயினும் பரீட்சை வினாத்தாள்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பரீட்சை நிறைவடைந்து வினாத்தாள்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு சட்டத்தை மீறி செயற்பட்ட தரப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment