(இராஜதுரை ஹஷான்)
அரச கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் அரச நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழலை தடுக்க முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
மஹரகம பகுதியில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழு உலகத்தையும் வலம் வருகிறார். ஆனால் பொருளாதார பாதிப்புக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள், எரிவாயு ஆகிய சேவை கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது என ஆளும் தரப்பினர் ஜனாதிபதியை புகழ்பாடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும்.
2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்கள் செலுத்திய நிலையில் எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 2022 ஏப்ரல் மாதமளவில் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது, இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
கடந்த ஒன்றரை வருட காலமாக வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்தாமல் அந்த நிதியை கொண்டே எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாட்டு கடன்களை தொடர்ந்து செலுத்தாமல் இருக்க முடியாது.
கடன் பெறுவதையே பிரதான பொருளாதார கொள்கையாக அரசாங்கம் கருதுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் தற்போது தோல்வியடைந்துள்ளது.
கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இரண்டாம் தவணை கடன் வழங்கல் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளடக்கிய சகல தகவல்களையும் பொது வலைத்தளத்தில் வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இந்த நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் அரச நிர்வாகத்தில் நிலவும் ஊழலை பகுதியளவேனும் குறைத்துக் கொள்ளலாம் என்றார்.
No comments:
Post a Comment