நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணமாகும் - விஜேதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, September 29, 2023

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணமாகும் - விஜேதாச ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு தேவையாகும். அத்துடன் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

சட்டம் தொடர்பான அறிவை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தேசிய சட்ட வாரத்தின் ஆரம்ப நிகழ்வு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தலைமையில் வியாழக்கிழமை (28) கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டில் சட்டத் தொழில் தொடர்பாக சாதாரண மக்கள் மத்தியில் இருந்துவரும் பிழையான கருத்தை போக்குவதற்காக முன்னாள் நீதிபதி சீ.ஜே. வீரமந்திரியினால் 2006ஆம் ஆண்டில் இந்த தேசிய சட்ட வார திட்டம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு தேவையாகும்.

தற்போது சட்ட உதவி ஆணைக்குழுவினால் குறைந்த வருமானமுடைய மக்களுக்கு இலவசமாக சட்டக்சேவையை பெற்றுக் கொடுப்பதற்காக செயற்திறமையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கிறோம். அதற்காக ஐராேப்பிய சங்கம், ஆசிய மன்றம், யுநேஸ்கோ மற்றும் யூ.என்.டீ.பி நிறுவனங்களின் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறது.

அதேபோன்று மத்தியஸ்த சபை முறையை பலப்படுத்துவதற்காகவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்கும் சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

மேலும் கடந்த காலத்தில் எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிக்கு சட்ட ஆதிக்கத்தின் வீழ்ச்சியும் காரணமாகும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இவ்வாறான வேலைத்திட்டங்களை நடத்துவது மிகவும் பிரயோசனமாகும்.

தேசிய சட்ட வாரத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சேவைகள் தற்காலத்துக்கு மிகவும் பிரயோனமாகின்றன. விசேடமாக பொதுமக்களுக்கு சட்டம் தொடர்பான புரிதலை பெற்றுக் கொடுப்பதற்கு சட்டத்தரணிகள் சமூகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த சேவையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக நீதி அமைச்சினதும் அரசாங்கத்தினதும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment