மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இருதய சிகிச்சைக்கான இயந்திரம் CATH-LAB (அஞ்சியோகிராம்) இம்முறை கட்டாயம் எமக்கு கிடைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிரத்தியேக மருத்துவ உபகரணத்தை முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரட்ச்சி அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி களுத்துறை மாவட்டத்துக்கு வழங்கினார். இந்த முறையற்ற செயற்பாட்டின் சாபத்தினால் அவர் அமைச்சுப் பதவியில் நீண்ட காலம் இருக்கவில்லை. நெருக்கடியான சூழ்நிலையில் பதவி விலகினார்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மீண்டும் அந்த மருத்துவ உபகரணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளபோது அதை பதுளை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இந்த முறையற்ற செயற்பாட்டின் சாபமும் விட்டு வைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நான் பதுளை மக்களுக்கு கிடைப்பதற்கு எதிர்க்கவில்லை. ஆனால் இவ் உபகரணம் இல்லாமல் அவதியுறும் எம்மக்களுக்கு இம்முறை எவ்வித ஏமாற்றமும் இன்றி கட்டாயம் கிடைக்க வேண்டும்.
அத்துடன் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய CT Scan கருவியும் செயலற்று காணப்படுகின்றது. இதனால் மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்ரர்கள். இதன் காரணமாகவே மக்கள் கடன்பட்டு பாரிய பணம் செலவு செய்து தனியார் வைத்தியசாலைகளை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
மலேரியா மற்றும் டெங்கு ஊழியர்கள் தொடர்பிலும் கூடிய கவனம் எடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment