யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (12.09.2023) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் ஊடாக தகவல்களை பரிமாறி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போதைப் பொருள் பாவனை என்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தினையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றமையினால், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் உணர்வு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், இக்கலந்துரையாடலில், யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன வளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தல், முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவது உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சுகாதார தரப்பினர் உட்பட்ட அரச அதிகாரிகள் மற்றுமா பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக சேவையாற்றி வருகின்ற சுகாதாரத் தொண்டர்கள் இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித் தருமாறு வேண்டுகோள் முன்வைத்ததுடன், தாங்கள் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வியல் சவால்களையும் எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment