(எம்.மனோசித்ரா)
இலங்கை துறைமுக அதிகார சபையில் 33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் பொறியியலாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை துறைமுக அதிகார சபை பொறியியலாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 6ஆம் திகதி ஊடகமொன்று 'இலங்கை துறைமுக அதிகார சபையில் 33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பொறியியலாளர் மற்றும் சாரதி கைது' என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது போலியான தகவலை அடிப்படையாகக் கொண்ட செய்தியாகும்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபையின் வேறொரு பிரிவின் தொழிநுட்ப பிரிவின் அதிகாரியொருவரும், அதே பிரிவில் பணி புரியும் ஊழியர் ஒருவருமே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் துறைமுக அதிகார சபையின் பொறியியலாளர்கள் எவரும் இதன்போது கைது செய்யப்படவில்லை.
இவ்வாறான போலியான செய்திகளை சமூகமயப்படுத்துவதன் ஊடாக இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் அதன் பொறியியலாளர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுகிறது. எனவே ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட முன்னர், உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment