கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோதமாக மண் கடத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 16 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக இரண்டு வாரகாலமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட மணல் விநியோகம் துறைசார் தரப்பினரின் ஒருங்கிணைந்த துரித நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.
தற்சமயம் மணல் விநியோக விடயத்தில் ஏற்பட்டுள்ள அவசியம் கருதி நேற்றையதினம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் (02.10.2023) திங்கட்கிழமை முதல் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை அனுமதி வழங்கப்பட்ட வகையில் மண் விநியோகம் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (26.09.2023) காலை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
நேற்றைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன் விவசாயம், நீர் வழங்கல், கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி, கூட்டுறவு, வாழ்வாதாரம், மீன்பிடி, வீதி, காணி, கால்நடை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், விளையாட்டு உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வட மாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment