ஆட்சேர்ப்புச் செய்வதன் ஊடாக யானை மனித மோதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் : தனியார் காணிகளிலுள்ள பைனஸ் மரங்களை வெட்டுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை திருத்த அவதானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 13, 2023

ஆட்சேர்ப்புச் செய்வதன் ஊடாக யானை மனித மோதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் : தனியார் காணிகளிலுள்ள பைனஸ் மரங்களை வெட்டுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை திருத்த அவதானம்

வனசீவராசிகள் திணைக்களத்தில் காணப்படும் பல்துறை பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதன் ஊடாக யானை மனித மோதல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வனசீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி தெரிவித்தார்.

வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து தற்பொழுது சேவையாற்றும் பல்துறை பணியாளர்களை நிரந்தர ஆட்சேர்ப்புச் செய்வதற்கான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான அனுமதி கிடைத்ததும் யானைகளால் ஏற்படும் தாக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வனசீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் யானை மனித மோதல்களைத் தடுப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யானை மனித மோதல்களைத் தடுப்பதற்கு ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ளும் அதேநேரம், பல்துறை பணியாளர்களை இணைத்துக் கொண்டால் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானைகள் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கான கண்காணிப்புக்களை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

தனியார் காணிகள் உள்ளிட்ட இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள பைனஸ் மரங்களை வெட்டுவதில் காணப்படும் தடைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தனியார் காணிகளில் உள்ள பைனஸ் மரங்களை வெட்டுவது குறித்த வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வனங்களை எல்லையிடும் நடவடிக்கையினால் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் பாதிக்கப்படுவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment