முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எந்தவொரு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அது குறித்து செய்திகள், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் என்பன சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வின்போது அங்கு கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் 'வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் அகப்பட்டுள்ளன' என்ற பதிவொன்று ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இது குறித்து கொக்குத் தொடுவாய் அகழ்வுப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவிடம் வினவியபோது, 'கடந்த ஏழு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரையில் கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் கிடைக்கவில்லை' என அவர் தெரிவித்ததாக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டியங்கி வரும் Fact Seeker தெரிவித்துள்ளது.
அத்துடன், 'கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் கடந்த (13) புதன்கிழமை ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 6 ஆம் திகதியிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் இரண்டு வழக்கறிஞர்கள் அகழ்வுப் பணிகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், சிவில் பிரதிநிதிகள் சிலரும் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
ஆகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியில் குறிப்பிடுவதைப்போன்று எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை' எனவும் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா Fact Seeker க்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment