திருகோணமலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா ? : சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 23, 2023

திருகோணமலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா ? : சாணக்கியன்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கிறார்கள். அண்மைக்காலமாக திருகோணமலை மாவட்டத்தில் இனவாத முரண்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. திருகோணமலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம்,தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையானின் ஊடக செயலாளராக பதவி வகித்த அசாத் மௌலானா பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஆகவே, முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்தபோது அவர் பிறப்பித்த கட்டளைக்கு அமைய லசந்த விக்கிரமசிங்க, ஜோசப் பரராஜசிங்கம் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே இந்த பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு பிரதானிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் எவ்வாறு தேசிய மட்டத்தில் வெளிப்படையான விசாரணைகளை எதிர்பார்க்க முடியும்.

தமிழ் இனப் படுகொலை தொடர்பில் நாங்கள் சர்வதேச விசாரணைகளை கோரியபோது ஒரு தரப்பினர் எம்மை விமர்சித்தார்கள். ஆனால் இன்று அவர்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை கோருகிறார்கள். ஆகவே தேசிய மட்டத்திலான விசாரணைகள் மீது நம்பிக்கை கிடையாது. ஆகவே சர்வதேச விசாரணைகளையே நாங்களும் கோருகிறோம்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கிறார்கள். அண்மைக்காலமாக திருகோணமலை மாவட்டத்தில் இனவாத முரண்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. திருகோணமலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல்வாதிகளும் சந்தேகத்துக்கிடமான வகையில் செயற்படுகிறார்கள்.

அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினையை மறந்து தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு போராடுகிறார்கள். கொலை, கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவே தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காமல் மீண்டும் சிறை செல்வதை தடுக்க போராடும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் பிள்ளையான் பதவி விலக வேண்டும். திரிபோலி குழுவுக்கு தலைமை தாங்கும் பிள்ளையானின் அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காது என்றார்.

No comments:

Post a Comment