(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவும் நிபா வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கமும் சுகாதாரத் துறையினரும் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.
'நிபா' வைரஸ் மிகவும் வேகமாக இந்தியா, பங்களாதேஷ், சிங்கபூர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பரவி வருகின்றது. இது பரவும் அபாயம் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இந்த வைரஸால் மரண வீதம் 40 -70 வீதமாக உள்ளது.
கொவிட் தொற்றால் மரண வீதம் 2-3 வீதமாகவே இருந்துள்ளது. இதனால் நிபாவின் அச்சுறுத்தல் அதிகமாகும். இதனால் இது குறித்து அரசாங்கம் அவதானத்தை செலுத்தி உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் உங்களின் பணிகளை முறையாக செய்யுமாறு சுகாதாரத் துறையை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
இதன்போது பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் சசில் பிரேமஜயந்த கூறுகையில், நான் ஊடகத்தில் இது தொடர்பில் செய்திகளை பார்த்தேன். இந்த விடயம் குறித்து மருத்துவ ஆய்வு நிறுவன அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னேற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment