பைனஸ் பலகை இறக்குமதியைக் கட்டுப்படுத்தி இந்நாட்டிலுள்ள தற்பொழுது 18 வருடங்களுக்குப் போதுமானதாகக் காணப்படும் பைனஸ் பலகைகளை பயன்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் வணிகப் பயிராகப் வளர்க்கப்பட்டுள்ள பைனஸ் மரங்களை, பலகைகளாக பயன்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்தல் தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் இந்தக் குழு 2023.09.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நாட்டிலுள்ள பைனஸ் மரங்களில், பலகையாக பயன்படுத்தக் கூடிய நிலையிலான பைனஸ் மரங்கள் சுமார் 1200 ஹெக்டயார் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழுள்ள காடுகளிலும், சுமார் 1764 ஹெக்டயார், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் கீழுள்ள காடுகளிலும் காணப்படுவதாக குழுவில் புலப்பட்டது.
அண்ணளவாக 18 வருடங்களுக்குத் தேவையான பைனஸ் பலகைகள் இந்நாட்டில் காணப்படுவதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது.
பயன்படுத்தக் கூடிய நிலையில் பைனஸ் மரங்கள் இந்நாட்டில் காணப்படும் பின்னணியில் பாரிய அளவில் அந்நியச் செலாவணி செலவு செய்யப்பட்டு பைனஸ் பலகைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவது தொடர்பில் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும வினவினார்.
இறக்குமதி செய்யப்படும் பலகைகளில் காணப்படும் உயர்ந்த தரம், இறக்குமதி செய்யும்போது அறவிடப்படும் வரி மிகவும் குறைந்த அளவில் காணப்படுகின்றமை காரணமாக அதற்கு அதிக கேள்வி காணப்படுவதாவும், உள்நாட்டுப் பைனஸ் பலகைகள் அவற்றில் காணப்படும் தழும்பு காரணமாக தரம் குறைவானதாக உள்ளதால் கேள்வி குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் உள்நாட்டுப் பைனஸ் பலகைகள் கட்டுமான வேலைகளுக்கே பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் இறக்குமதி செய்யப்படும் பலகைகள் சொகுசு தளபாடம் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், உள்நாட்டுப் பைனஸ் பலகைகள் தொடர்பில் பொதுமக்களிடம் நேர்மறையான மனப்பாங்கு இல்லை என்பதால் தளபாடம் தயாரித்தல் உள்ளிட்ட உள்ளிட்ட வேறு தேவைகளுக்கும் உள்நாட்டு பைனஸ் பலகைகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பைனஸ் பலகைகளுக்கான செலவு மற்றும் உள்நாட்டுப் பைன் பலகைகளை தயாரிப்பதற்கான செலவு தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு வழங்குமாறு அரச மாரக் கூட்டுத்தாபனத்துக்கு குழு அறிவுறுத்தல் வழங்கியது.
இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.
அத்துடன், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு, வனப் பாதுகாப்புத் திணைக்களம், அரசாங்க மரக் கூட்டுத்தாபனம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் இலங்கை சுங்கம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment