பாகிஸ்தானுக்கு எதிரான சுப்பர் 4 போட்டியின்போது உபாதைக்கு உள்ளான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷண நாளை (17) நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெளண்டரி ஒன்றை தடுக்க முயன்றபோது தீக்ஷணவுக்கு தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் பந்துவீசியபோதும் வலியுடனேயே தொடர்ந்து ஆடியது தெரிந்தது.
தீக்ஷணவின் காயம் எந்தளவு உள்ளது என்பதை மதிப்பீடு செய்ய உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் செய்தி இணையதளம் ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் சோதனையில் தசையில் காயம் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணம் நெருங்கியுள்ள நிலையில் நாம் எந்த ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய முடிவையும் எடுக்க மாட்டோம் என குறித்த அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு வலது கை சுழற்பந்து வீச்சாளரும், இடது கை துடுப்பாட்ட வீரருமான (Left hand Bat, Right arm Offbreak) சஹன் ஆரச்சிகே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமன்தவையும் அழைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, மைதானம் மற்றும் அணியின் திட்டத்திற்கு அமையவே வீரர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி நான்கு முன்னணி பந்துவீச்சாளர்கள் இன்றியே ஆசிய கிண்ணத் தொடரில் விளையாடி வருகின்றது.
சுழல்பந்து சகலதுறை வீரர் வணிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீர, லஹிரு குமார மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment