மாகாண சபைகள் இயங்காத இந்தக் காலப்பகுதியில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் பணத்தை வெளிப்படைத் தன்மையுடன் பயன்படுத்துமாறு, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு நிதி ஆணைக்குழுவை அறிவுறுத்தியது.
குறித்த குழு பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்திராரச்சி தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மாகாண சபைகள் சுதந்திரமாக செயற்படக்கூடிய வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
எனவே அவற்றின் முன்னேற்றத்துக்குக் காணப்படும் தடைகளை இனங்கண்டு முன்வைக்க வேண்டிய பொறுப்பு நிதி ஆணைக்குழுவிற்கு உண்டு எனவும் தலைவர் தெரிவித்தார்.
மாகாண சபைகள் செயற்படாத காலப்பகுதியில் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
2024ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் குழந்தைகளின் போசாக்குத் தேவைக்காக 16.6 பில்லியன் ரூபாவை ஒதுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இதற்கமைய, மாகாண சபைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதேவேளை மாகாண சபைகளில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்குமாறும் அதன் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த தலைவர், பொலிஸ் தொடர்ந்தும் மக்கள் நட்புறவான நிறுவனமாக செயற்படுவது அத்தியாவசியமானது என்றும், இதற்கமைய அரசியல்வாதிகளிடம் இருந்து பொலிஸ் வேறுபடுத்தப்பட வேண்டும் என்றும் தலைவர் வலியுறுத்தினார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் பாரிய மனிதவளப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதன்படி, பொலிஸ் ஆணைக்குழுவின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் உள்ளடங்கிய அறிக்கையொன்றைத் தயாரித்து அதனைக் குழுவிடம் ஒப்படைக்குமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான டபிள்யூ.டி. ஜே. செனவிரத்ன, சமிந்த விஜேசிறி, மொஹமட் முஸம்மில், ரோஹன பண்டார, குணதிலக ராஜபக்ஷ ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment