13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது : சந்திரிக்கா - News View

About Us

About Us

Breaking

Saturday, September 16, 2023

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது : சந்திரிக்கா

(எம்.வை.எம்.சியாம்)

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை கடுகளவேனும் மாற்றவில்லை. அவர் மாறியுள்ளார். 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வும் அவருக்கு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த பிரச்சினை தொடர்பில் நான் பேச வேண்டும். எனது வாழ்வில் இந்த பிரச்சினைக்காக பாரியளவில் அர்ப்பணித்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் என்னை கொலை செய்தும் இருப்பார்கள்.

அரசியலமைப்பின் சட்டமாக காணப்படும் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தற்போது ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். இருப்பினும் இதனை ஒரு புறம் தள்ளி வைத்துள்ளனர். அதனை ஏன் செயல்படுத்த முடியாது?

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் சில விடயங்கள் உள்ளன. அதனை நடைமுறைப்படுத்த விரும்புவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் என்னிடமும் கேட்டுக் கொண்டார்.

அதற்கு எந்த ஒரு ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நான் தயார் என கூறினேன். எனினும் அதனை தற்போது யார் நடைமுறைப்படுத்துவது? அனைத்து மாகாண சபைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வடக்கு, கிழக்கில் குறைந்தது மாகாண சபைகளாவது இருக்க வேண்டும். அதற்கு முதலில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். அதனை ஏன் நடத்த முடியாது?

வடக்கு, கிழக்கில் மாகாண சபை தேர்தலை நடத்தினால் ஏனைய பகுதிகளிலும் சத்தமிடுவார்கள். 13 ஆம் திருத்ததை நடைமுறைப்படுத்தி இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போதைய நிலைமை போன்று இலகுவான சந்தர்ப்பம் இருக்காது.

படிப்படியாக வந்து நான் செய்ய முற்பட்டது சரியானது என தற்போது மக்களுக்கு புரிந்துள்ளது. இதற்கு அப்பால் சென்று புதிய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்தேன். இனப் பிரச்சனைக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய தீர்வு அது என முழு உலகமும் கூறுகிறது.

2/3 பெரும்பான்மையை பெற 7 வாக்குகளே அன்று போதாமல் போனது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அந்த 7 வாக்குகளை வழங்க வில்லை. நான் அதனை பலவந்தமாக கொண்டு வரவில்லை. அவர்களுடன் 5 மாதங்கள் கலந்துரையாடியே கொண்டு வந்தேன். கலந்துரையாடி இணங்கியே பிரதியை கொண்டு வந்தேன். அதற்கு வாக்களிக்கவில்லை.

அது மாத்திரமல்ல எனக்கு கூச்சலிட்டு, அதனை தீயிட்டு கொளுத்தினர். தற்போதாவது அதனை நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை கடுகளவேனும் மாற்றவில்லை. அவர் மாறியுள்ளார். இது சிறந்த விடயம்.

போராட்டத்தினால் பாரிய மாற்றம் ஏற்பட்டது. தொலைக்காட்சிகளில் அதனை பார்த்து நான் அழுதேன். அந்த இளைஞர், யுவதிகள் யாருமே கூறாமலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மத மக்களும் ஒன்றிணைந்து போராடினார்கள்.

அங்கு ஒன்றாக சாப்பிடும் விதம், ஒருபோதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம் சமய தலைவர்கள், தேரர்கள் மற்றும் ஏனைய மத தலைவர்களை இணைத்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து நோன்பு திறந்தனர். இது மிகப்பெரிய மாற்றமாகும். இதுவே தற்போது சிறந்த சந்தர்ப்பம்.

நானாக இருந்தால் மறுநாளே அதனை செய்திருப்பேன்.13 அல்ல அதற்கு அப்பால் சென்று தீர்மானம் எடுத்திருப்பேன். தற்போது அதனை செயற்படுத்த முடியும்.

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வும் அவருக்கு உள்ளது.

சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் பிரதானி என்ற வகையில் ஜனாதிபதியும் அரசாங்கத்தின் ஏனைய அங்கத்தவர்களும் இதனை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பிரிவுகளுக்கு கூற வேண்டும். அதிகாரிகளுக்கு கூற வேண்டும். அது சரியாக நடைமுறைப்படுத்தபடுகிறாதா என்பதை பின்னர் அவதானிக்க வேண்டும். அதனை செயல்படுத்த மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment