(இராஜதுரை ஹஷான்)
பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அதனை கண்டு மகிழ்ச்சியடையும் மனநிலையில்தான் புகையிரத சாரதிகள் உள்ளார்கள். ஆகவே நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் ஒட்டு மொத்த மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாரிய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புகையிரத சாரதிகள் சங்கத்தினர் பதவி மற்றும் சம்பள உயர்வு கோரி பொறுப்பற்ற வகையில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
புகையிரத சாரதிகள் சங்கத்தின் ஒரு தரப்பினரது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் பொதுப் பயணிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு போராட்டத்தில் ஈடுபடும் சாரதிகள் பொறுப்புக்கூற வேண்டும்.
நாட்டில் தமக்கு மாத்திரம்தான் பொருளாதார பாதிப்பு உள்ளது என்று நினைத்துக் கொண்டு புகையிரத சாரதிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், பொறுப்பற்ற வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளார்.
பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அதனை கண்டு மகிழ்ச்சியடையும் மனநிலையில்தான் புகையிரத சாரதிகள் உள்ளார்கள்.
ஆகவே நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment