இலங்கைக்கு ஐரோப்பிய சங்கத்துடன் மேலதிக வர்த்தக நிலுவை உள்ளதாக குழுவில் புலப்பட்டது : "ஒற்றை சாளர இயக்க முறைமையை" ஒழுங்குபடுத்துவதற்கு விரைவாக செயற்படவும் - News View

About Us

About Us

Breaking

Friday, September 22, 2023

இலங்கைக்கு ஐரோப்பிய சங்கத்துடன் மேலதிக வர்த்தக நிலுவை உள்ளதாக குழுவில் புலப்பட்டது : "ஒற்றை சாளர இயக்க முறைமையை" ஒழுங்குபடுத்துவதற்கு விரைவாக செயற்படவும்

GSP பிளஸ், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுடனான வர்த்தகத் தொடர்புகள் பற்றி முன்வைத்த இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் இந்த விடயங்கள் தொடர்பில் குழுவில் வெளிப்படுத்தினர்.

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள், GSP பிளஸ், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுடனான வர்த்தகத் தொடர்புகளின் தற்போதைய நிலை பற்றி குழுவில் விடயங்களை முன்வைத்ததுடன், இது தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தலைமையில் 2023.09.19 ஆம் திகதி சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூடியபோதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதில் இளைஞர் பிரதிநிதிகள் சிலருக்கும் சிக்கல்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு குழுவினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, இலங்கை காரீயம் ஏனைய கனிய வளங்கள் கொண்ட நாடாக இருந்தாலும், அந்தக் கனிய வளங்களை பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களாக ஏற்றுமதி செய்வதில் குறைந்த அளவிலான செயல்திறன் கொண்டிருப்பதாகக் குழுவில் பங்கேற்ற இளைஞர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

போகல காரீய சுரங்கம், கஹட்டகஹ சுரங்கம், ராகெதர சுரங்கம் மற்றும் ஏனைய சுரங்கங்கள் இலங்கையில் இருந்தாலும் அவற்றில் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என இதன்போது இளைஞர் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன் நேரடியான சுரங்க அகழ்வு மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட சந்தையொன்று மாத்திரம் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த குழுவின் தலைவர், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவகத்துடன் (SLINTEC) நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும், தென் கொரிய மற்றும் ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்நாட்டில் தமது தொழிற்சாலைகளை நிறுவுவது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்பார்த்த அபிவிருத்திகள் எட்டப்படாவிட்டாலும், சந்தையை உருவாக்குவதற்கு கைத்தொழில்களை இணைத்து இத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொடுக்கல்வாங்கல்களை எளிதாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒற்றை சாளர இயக்க முறைமையின் தற்போதைய நிலை மேலும் சீரமைக்கப்பட வேண்டும் என்பது குழுவின் கருத்தாக இருந்தது.

இலங்கை முதலீட்டு சபை, முதலீட்டாளர் ஒருவருக்கு அனுமதி வழங்க முன்னர் அது சம்பந்தமான பல அனுமதிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என குழு சுட்டிக்காட்டியதுடன், வகைப்படுத்தலின் பிரகாரம் அனுமதி வழங்கும் செயன்முறை பற்றி கருத்திற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டியது.

அத்துடன், ஒற்றை சாளர இயக்க முறைமை எதிர்பார்க்கப்பட்ட அளவில் வெற்றியடையாமைக்குக் காரணம் அரசாங்கத்தினதோ அதிகாரிகளினதோ திறமையின்மை அல்ல என்றும், சட்டக் கட்டமைப்பில் காணப்படும் சில இடைவெளிகளே என குழு மேலும் சுட்டிக்காட்டியது. அதற்கமைய, சில சட்டங்களை மறுஆய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டும் என்று துறைசார் மேற்பார்வைக் குழுவின் கருத்தாக இருந்தது.

உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் குழு வலியுறுத்தியது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழுவின் தலைவர், உள்நாட்டு சந்தையில் கூட குறிப்பிட்ட சில பொருட்களுக்கான தேவை காணப்படுகின்ற போதிலும் விநியோகச் சங்கிலியில் தொடர்ச்சி இன்மை பாரிய சிக்கலாகும் எனத் தெரிவித்தார். தொடர்ச்சி இன்மையால் விலை அதிகரிப்பதாகவும் இதனால் கொள்வனவாளர்கள் இலக்கப்படுவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

உற்பத்திச் செலவு அதிகரிப்பது சிக்கலானது எனவும், இந்தச் சிக்கலை தீர்ப்பதற்கு பொறிமுறையொன்றை அமைப்பது தொடர்பில் கண்டறியுமாறு குழுவினால் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களில் காணப்படும் பணியாட்கள் வெற்றிடத்துக்கு நிரந்தரத் தீர்வு வழக்கும் வரை தொண்டு அடிப்படையில் சேவையை வழங்க விரும்புபவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவரினால் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு பரிந்துரை வழங்கப்பட்டது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுடனான வர்த்தகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விரிவான தலையீட்டின் அவசியம் தொடர்பில் விளக்கிய குழு, அதற்குத் தேவையான நடவடிக்கையை தாமதமின்றி எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிரோஷன் பெரேரா, யதாமினி குணவர்தன, மதுர விதானகே அகிய குழுவின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குழுவின் தலைவரின் அனுமதியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

வெளிவிவகார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், ர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குவின் இளைஞர் பிரதிநிதிகள் சிலரும் குழுவின் தலைவரின் அழைப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment